ஆவடியில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை நேரத்தில் ஓடிக் கொண்டிருந்த மின் தொடர் வண்டியை ரயில்வே நிர்வாகம் ரத்து செய்ததால் கோபமுற்ற பயணிகள் ஆவடி ரயில் நிலையத்தில் ரயில் பாதையில் இறங்கி மறியிலில் ஈடுபட்டதன் காரணமாக புறநகர், விரைவு ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது!
ஆவடியில் இருந்து காலை 7.40 மணிக்கு சென்னை கடற்கரைக்கு ஓடிக் கொண்டிருந்த மின்தொடர் வண்டிக்காக ஏராளமான பயணிகள் காத்திருந்தனர். அந்த மின் வண்டி ரத்து செய்யப்பட்டதை அறிந்ததும், கோபமுற்ற பயணிகள் ஆவடி வழியாக கடக்க வேண்டிய கன்னியாகுமரி விரைவு ரயிலை தடுத்து நிறுத்தினர். ரயில் பாதைகள் அனைத்திலும் பயணிகள் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் திருவள்ளூர் - ஆவடி வழியாக சென்னை வந்துசேர வேண்டிய ரயில்கள் அனைத்தும் ஆங்காங்கு நிறுத்தப்பட்டது.
இதனால் சென்னை சென்ட்ரல், கடற்கரை ரயில் நிலையங்களில் இருந்து ஆவடி மார்க்கமாக செல்ல வேண்டிய புறநகர் ரயில்களும் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. 3 மணி நேரத்திற்கும் மேலாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 7.30 மணிக்குத் துவங்கிய இந்த மறியல் இன்னமும் தொடர்வதால் ரயில்சேவை பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது.