மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள் அளவை எட்டும் நிலையில், நேற்று அணை அருகே இடி விழுந்து தென்னை மரம் கருகியது பொதுமக்களை பீதியடைய வைத்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள அணைகள் நிரம்பிய காரணத்தால் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நீர்மட்டம் 116 அடிக்கு மேல் இருப்பதால் அணை கடல் போல காட்சியளிக்கிறது.
நேற்று இரவு மேட்டூரில் இடி மின்னலுடன் மழை பெய்தது.மேட்டூர் அணை 16 கண் மதகு பகுதியில் இருந்து அரை கி.மீ., தூரத்திற்குள் உள்ள சேலம் கேம்ப், சாஸ்திரி நகரில் இருதயராஜ் என்பவர் வீட்டின் அருகில் உள்ள தென்னை மரத்தை இடி தாக்கியது.
தென்னை மரம் தீ பிடித்து எரிந்து கருகியது.
மேட்டூர் அணையில் அதிக அளவில் நீர் இருப்பு காணப்படும் நிலையில் அருகிலுள்ள சேலம் கேம்ப் பகுதியில் இடி தாக்கியது. அப்பகுதி மக்களை அதிர்ச்சிடைய வைத்தது. மேட்டூர் அடுத்த கோம்புரான் காடு அருகே, மாரியம்மன் காட்டுவளவில் இடி தாக்கி கூரை வீடு தீ பிடித்து எரிந்தது. தகவல் அறிந்த மேட்டூர் தீயணைப்பு படை வீரர்கள், நிலைய அதிகாரி சிவகுமார் தலைமையில் சென்று தீயை அணைத்தனர்.