Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டுவெடிப்பு : 11 பேர் குற்றவாளிகள் - தீர்ப்பு

Advertiesment
ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டுவெடிப்பு : 11 பேர் குற்றவாளிகள் - தீர்ப்பு

Webdunia

, வியாழன், 21 ஜூன் 2007 (19:54 IST)
சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு வைத்து 11 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 11 பேர் குற்றவாளிகள் என்று சென்னை தடா சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.

1993ஆம் ஆண்டு சேத்துப்பட்டில் உள்ள பஞ்சவடியில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 11 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமுற்றனர்.

இவ்வழக்கில், தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்கத்தின் தலைவர் எஸ்.ஏ.பாட்ஷா உட்பட 18 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த தடா சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி.ராமசாமி இன்று தீர்ப்பளித்தார்.

குற்றம் சாட்டப்பட்ட 18 பேரில், 11 பேர் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என தீர்ப்பளித்த நீதிபதி, அபுபக்கர் சித்திக், ஐதர் அலி, காஜா நிஜாமுதின் ஆகிய 3 பேர் இந்த குண்டு வெடிப்பிற்கு முக்கிய காரணமானவர்கள் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இவர்கள் மூவருக்கு எதிராக தடா சட்டப்பிரிவு 3(2), இந்திய தண்டனைச் சட்டம் 120(பி), 302 தொடர்புடன் சாட்டப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாகக் கூறினார். இவர்கள் மூவருக்கும் ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி, குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்ட மற்ற எட்டு பேரும் இந்த குண்டு வெடிப்பை சதித் திட்டம் தீட்டி நிறைவேற்றிய மூவருக்கும் அடைக்கலம் அளித்து குற்ற செயல் புரிவதற்கு துணையாக இருந்துள்ளனர் என்று கூறி, அவர்களில் 7 பேருக்கு தலா 5 ஆண்டு கடுங்காவலும் ஒருவருக்கு 3 ஆண்டு கடுங்காவலும் விதித்து தீர்ப்பளித்தார்.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தடை செய்யப்பட்ட அல் உம்மா தலைவர் எஸ். ஏ. பாட்ஷா உட்பட 4 பேர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படாததால் அவர்களை விடுவிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 18 பேரில் முஸ்டா அஹமது தலைமறைவாக உள்ளார். குற்றம் சாட்டப்பட்ட மற்ற இருவர்களான இமாம் அலி, பழனி பாபா ஆகிய இருவரும் வெவ்வேறு சம்பவங்களில் கொல்லப்பட்டனர் எனபது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil