ராமேஸ்வரத்தையும், இலங்கையின் தலைமன்னாரையும் இணைக்கும் நிலத்திட்டை ராமர் பாலம் என்றும், அதனை காப்பாற்ற சேது சமுத்திரத் திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தடை விதிக்க மறுத்துவிட்டது!
தண்டியைச் சேர்ந்த சுவாமி வித்யானந்த பாரதி என்பவரும், மற்றவர்களும் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரிஜித் பசாயத், டி.கே. ஜெயின் ஆகியோர் கொண்ட நீதிமன்றக் குழு, மனு மீதான விசாரணை வரும் 28 ஆம் தேதி துவங்கும் என்று அறிவித்துள்ளது.
ராமேஸ்வரத்தையும், தலைமன்னாரையும் இணைக்கும் நிலத்திட்டுதான் ராமரும், அவருடைய வானர சேனையும் கட்டியது என்றும், அதனை இடிப்பது இந்நாட்டின் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை புண்படுத்துவதாகும் என்றும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்த வித்யானந்த பாரதி, சேது சமுத்திர திட்டப் பணிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக விளக்கமளிக்குமாறு மத்திய அரசு, இந்திய தொல்லியல் துறை, இந்திய புவியியல் அளவைத் துறை, தமிழக அரசு, தூத்துக்குடி துறைமுக பொறுப்புக் கழகம், சேது சமுத்திரத் திட்டக் கழகம், தேச சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம் ஆகியவற்றிற்கு தாக்கீது அனுப்ப வேண்டும் என்றும், அந்த நிலத்திட்டு குறித்து ஆராய புவியியல் ஆய்வாளர்களைக் கொண்ட நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
சேது சமுத்திரத் திட்டத்தால் சுற்றுச்சூழலிற்கும், கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் தாவரங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், இத்திட்டத்தின் காரணமாக 5 லட்சம் பேர் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அம்மனுவில் வித்யானந்த பாரதி கூறியிருந்தார்.