பிரபல இந்திய டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி துபாயில் புதிய டென்னிஸ் பயிற்சி பள்ளியை துவக்கியுள்ளார்.
அரபு நாடுகளில் டென்னிஸ் பயிற்சி பள்ளியை அமைக்க வேண்டும் என்பதில் மிக ஆர்வமாக இருந்த பூபதிக்கு துபாயில் அதிக நண்பர்கள் இருப்பதால் அவர்களுடன் இணைந்து மிர்திப் பகுதியில், 'மகேஷ் பூபதி டென்னிஸ் அகாடமி' (எம்.பி.டி.ஏ.)யை துவக்கியுள்ளார். நேற்று நடந்த திறப்பு விழாவில் 40 குழந்தைகள் பெற்றோருடன் பங்கேற்றனர்.
பூபதியும் டென்னிஸ் எமிரேட்ஸ் பொது செயலர் முகமது அல் மெர்ரியும் இணைந்து துவக்கியுள்ள இந்த பயிற்சி பள்ளி துபாய் நாட்டு குழந்தைகள் திறமையை வளர்த்துக்கொள்ள ஏதுவாக அமையும். இந்த பள்ளிக்கு அனில் மேத்யூ தலைமையில், தகுதிவாயந்த வீரர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர்.
இதுபோன்ற பள்ளியை அயல்நாட்டில் துவங்குவது இதுவே முதல் முறை என்றபோதிலும், எம்.பி.டி.ஏ.வுக்கு இது 9-வது பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.
ஒப்பந்தப்படி, இந்த பள்ளி அவ்வப்போது பயிற்சி முகாம்களை நடத்த உள்ளது. இங்கு பயிற்சி பெறும் சிறந்த வீரர்கள் இந்தியாவில் உள்ள மையங்களில் ஆண்டுக்கு இரண்டு வாரம் இலவசமாக பயிற்சி பெறும் வாய்ப்பை பெறுகிறார்கள்.