மேற்கிந்திய தீவை சேர்ந்த நடுவர் ஸ்டீவ் பக்னர் மீது சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் புகார் செய்ய இந்தியா கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
மேற்கிந்திய தீவை சேர்ந்தவர் ஸ்டீவ் பக்னர். இவர் இந்தியாவுக்கு எதிரான பல ஆட்டங்களில் பாதகமான தீர்ப்புகளை வழங்கி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு டெண்டுல்கருக்கு பந்து தோள் பட்டையில் பட்டபோது அவர் எல்.பி.டபிள்யூ. கொடுத்தார். இந்த அப்போது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இதற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டு பக்னர், மனிதர்கள் தவறு செய்வது இயக்கை என்றும், நானும் மனிதன் தானே என்று விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில் சிட்னி டெஸ்டில் முக்கியமான தருணத்தில், சைமன்ட்சுக்கு அவர் வழங்க மறுத்த அவுட் ஆட்டத்தின் போக்கையே மாற்றி போட்டு விட்டது.
இது குறித்து விவாதித்த இந்திய கிரிக்கெட் வாரியம், பக்னர் மீது சர்வதேச கிரிக்கெட் பேரவை போட்டி நடுவரிடம் புகார் செய்ய முடிவு செய்துள்ளது.
விவாதத்துக்கு பின் இந்திய கிரிக்கெட் வாரிய துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில், பக்னரின் தவறான முடிவுகள் குறித்த ஆட்சேபனையை சர்வதேச கிரிக்கெட் பேரவையின் போட்டி நடுவரிடம் (மைக் பிராக்டர்) புகார் அளிக்கும்படி எங்களது அணி நிர்வாகத்தை கேட்டுக் கொண்டு இருக்கிறோம். பக்னரின் தவறான முடிவுகள் குறித்து எல்லா கிரிக்கெட் வீரர்களும் விமர்சித்து இருக்கிறார்கள் என்று கூறினார்.
மேலும், இந்த விவகாரத்தை துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவை கவனித்து இருக்கும் என்று உறுதியாக நம்புவதாகவும் அவர் கூறினார்.