''ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் தேவைப்பட்டால் துவக்க ஆட்டக்காரராக களம் இறங்க தயார்'' என்று இந்திய அணியின் முன்னாள் தலைவர் ராகுல் திராவிட் கூறியுள்ளார்.
விக்டோரியா அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் துவக்க ஆட்டக்காரராக விளையாடிய ராகுல் திராவிட் நேற்று மெல்போர்னில் செய்தியாளர்களுக்கு அளித் பேட்டியில், டெஸ்ட் போட்டியில் துவக்க வீரராக ஆடும்படி என்னை கேட்டுக்கொண்டால், அதனை மகிழ்ச்சியுடன் ஏற்று செயல்பட தயார். எந்த வரிசையிலும் இறங்கி விளையாட ஆர்வமாக இருக்கிறேன். அப்போதும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பேன்.
ஆஸ்ட்ரேலிய தொடரில் துவக்க ஆட்டக்காரராக ஆடினால் சிறப்பாக இருக்கும் என்று அணி நிர்வாகம் நினைத்தால் எனக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. அணியில் மிடில் ஆர்டர் வரிசை மிகவும் வலுவாக உள்ளது. அதே நேரத்தில் பல நல்ல இளம் வீரர்கள் அந்த இடத்துக்கு போட்டி போடுகிறார்கள். அதனை ஒதுக்கி விட முடியாது. ஆஸ்ட்ரேலியாவில் நல்ல துவக்கம் காண்பது கஷ்டமானதாகும். தொடக்கத்தில் அதிக விக்கெட்டுகளை இழக்காமல் பார்த்து கொண்டால், பின்னர் அதிக ரன்களை குவிக்க முடியும்.
கடந்த சுற்றுப்பயணத்தில் 2 பயிற்சி ஆட்டத்தில் விளையாடினோம். அதுபோல் இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். ஆனால் தற்போது சர்வதேச போட்டி அட்டவணை அதிகமாக இருப்பதால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இது ஒரு பிரச்சினை இல்லை என்று திராவிட் கூறினார்.