இந்திய கிரிக்கெட் லீக் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டதற்காக கிரிக்கெட் பயிற்சிக் கழகத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து இந்திய அணியின் முன்னாள் தலைவர் கபில் தேவை நீக்கியுள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்!
மும்பையில் இன்று காலை துவங்கிய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆண்டுக் கூட்டத்தில், இந்திய கிரிக்கெட் லீக் அமைப்பில் கபில் தேவ் இணைந்தது விதிமுறைகளை மீறிய நடவடிக்கை என்று கூறி அவரை நீக்கம் செய்துள்ளதாக கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு இணையான மற்றொரு கிரிக்கெட் அமைப்பாக உருவாகியுள்ள இந்திய கிரிக்கெட் லீக் அமைப்பில் கபில் தேவ் மட்டுமின்றி, பிரையன் லாரா, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முன்னாள் தலைவர் இன்சமாம் உல் ஹக், மொஹம்மது யூசஃப், அப்துல் ரசாக், இம்ரான் ஃபராத், தென் ஆப்ரிக்க வீரர்கள் லான்ஸ் குளூஸ்னர், நிக்கி போயே ஆகியோரும், இந்திய அணிக்காக விளையாடிய தீப் தாஸ் குப்தா, தீரஜ் யாதவ், தினேஷ் மோங்கியா, மனீஷ் சர்மா, ரீத்திந்தர் சிங் சோதி, ஜெயப்பிரகாஷ் யாதவ் ஆகியோர் உள்ளிட்ட 51 பேர் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.