அன்னா ஹசாரே மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மறைமுக தாக்குதல் தொடுத்துள்ளது. எங்கள் கட்சிக்கு யாருடைய ஆதரவும் தேவையில்லை என அக்கட்சியின் முக்கிய தலைவர் கூறியுள்ளார்.
ஊழலுக்கு எதிராக போராடும் சமூக ஆர்வலரான காந்தியவாதி அன்னா ஹசாரே சமீபத்தில் தனது ஆதரவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜிக்கு அளித்தார். தனது 17 கேள்விகளுக்கு அவர் தகுதியானவர் என்பதால் அவரை ஆதரிப்பதாக அறிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்திருந்த அன்னா ஹசாரே கடைசி நேரத்தில் அந்த கூட்டத்தை ரத்து செய்தார். இதற்கிடையே அன்னா ஹசாரே தனது ஆதரவு மம்தா பானர்ஜிக்கு மட்டும்தான் என்றும் அவரது கட்சிக்கு அல்ல என மீண்டும் அறிவித்தார். இது நாடாளுமன்ற தேர்தலில் அவரது கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என கருதப்பட்டது.
இந்நிலையில் அன்னா ஹசாரே மீது திரிணாமுல் காங்கிரஸ் மறைமுகமாக தாக்குதல் தொடுத்துள்ளது. அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் முகுல் ராய் நேற்று கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
எங்கள் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி நாடு முழுவதும் அறிந்த தலைவர் ஆவார். அவருக்கு நாடு முழுவதும் மக்களிடம் செல்வாக்கு உள்ளது. அவரை யாரும் பிரபலப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அவரும் யாரிடமும் தன்னை பிரபலப்படுத்த வேண்டும் என்றும் கோரவில்லை.
டெல்லியில் கடந்த 12 ஆம் தேதி நடந்த கூட்டத்தில் அன்னா ஹசாரேயுடன் சேர்ந்து அவர் பேச திட்டமிட்டிருந்தார். ஆனால் இந்த கூட்டத்தை அன்னா ஹசாரே புறக்கணித்தது மம்தா பானர்ஜிக்கு பெரிய மனக்கஷ்டத்தை அளித்தது. இதனால் அவர் அகமதாபாத்தில் வரும் 20 ஆம் தேதி நடக்க இருந்த பேரணியை ரத்து செய்து விட்டார். அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மேற்கு வங்க மாநிலத்தில் 5 நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்வதில் தனது முழு கவனத்தை செலுத்தியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவரிடம் செய்தியாளர் ‘ரத்து செய்யப்பட்ட அகமதாபாத் கூட்டம் எப்போது நடத்தப்படும்’ என்று கேட்டதற்கு ‘அதுபற்றி இன்னும் முடிவு செய்யவில்லை’ என்றார்.
மற்றொரு கேள்விக்கு அவர் பதிலளிக்கையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் மத்தியில் ஆட்சி அமைப்பதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முக்கிய பங்கு வகிக்கும். ஆனால் நாங்கள் ஒரு போதும் பாரதீய ஜனதாவுடன் கைகோர்க்க மாட்டோம் என்றார்.