கெஜ்ரிவாலின் ரூ.20000 விருந்தில் 250 பேர் கலந்து கொண்டனர்
, செவ்வாய், 18 மார்ச் 2014 (11:40 IST)
அரவிந்த் கெஜ்ரிவாலுடன் அரசியல் பேசிக் கொண்டே உணவு சாப்பிடுவதற்கு 20 ஆயிரம் ரூபாயை செலவு செய்ய முன்வந்த 250 பேர் இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த விருந்தில் மதுவை தவிர்த்து சைவ மற்றும் அசைவ உணவு வகைகள் பறிமாறப்பட்டன.
அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் தேர்தல் செலவுக்கு நிதி திரட்ட செல்வந்தர்களுடன் அரசியல் கட்சி தலைவர்கள் உணவு அருந்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஆனால், இது போன்ற நிகழ்ச்சிகள் இந்தியாவில் இன்னும் பிரபலமடையாத நிலையில், ஆம் ஆத்மி கட்சியினர் தேர்தல் நிதி திரட்டுவதற்காக பெங்களூரில் ஒரு விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் விருந்து சாப்பிட விரும்புபவர்கள் 20 ஆயிரம் ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு பெரிய பலனைத் தருமா? என இந்திய அரசியல் பார்வையாளர்கள் புருவத்தை நெளித்து யோசித்துக் கொண்டிருந்த வேளையில், ’நிச்சயமாக பலனைத் தரும்’ என்று பெங்களூரில் உள்ள கேப்பிட்டல் நட்சத்திர ஓட்டலில் கடந்த 15-ம் தேதி நடைபெற்ற இந்த நிதி திரட்டும் விருந்து நிகழ்ச்சி நிரூபித்துள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவாலுடன் அரசியல் பேசிக் கொண்டே உணவு சாப்பிடுவதற்கு 20 ஆயிரம் ரூபாயை செலவு செய்ய முன்வந்த 250 பேர் இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த விருந்தில் மதுவை தவிர்த்து சைவ மற்றும் அசைவ உணவு வகைகள் பறிமாறப்பட்டன.
இந்த நிகழ்ச்சியின் மூலமாகவும், இதேபோல், முன்னர் நாக்பூரில் சுமார் 150 பேர் தலா 10 ஆயிரம் ரூபாய் செலுத்தி பங்கேற்ற மற்றொரு நிகழ்ச்சியின் வாயிலாகவும், இதுவரை ஆம் ஆத்மி கட்சிக்கு சுமார் 70 லட்சம் ரூபாய் தேர்தல் நிதியாக சேர்ந்துள்ளது.
இதே பாணியில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பங்கேற்கும் சிறப்பு கூட்டம் ஒன்று வரும் 26 ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் மோடியுடன் அமர்ந்து சாப்பிட கட்டணத் தொகையாக ரூ.1 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.25 லட்சம் கொடுப்பவர்கள் மோடிக்கு மிகவும் அருகில் அமர்ந்து சாப்பிடலாம். எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருந்தின் மூலம் மட்டும் பாஜகவுக்கு ரூ.15 கோடி நிதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.