Newsworld News National 1403 17 1140317003_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து கெஜ்ரிவால் போட்டி

Advertiesment
இந்தியா
, திங்கள், 17 மார்ச் 2014 (09:44 IST)
நாடாளுமன்ற தேர்தலில், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட முடிவு செய்திருக்கிறார்.
FILE

பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி, நாடாளுமன்ற தேர்தலில் குஜராத் அல்லாத வேறு மாநில தொகுதி ஒன்றில் போட்டியிட முடிவு செய்திருந்தார்.

அதன்படி, நாட்டின் மிகப்பெரிய மாநிலமான 80 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதி பா.ஜ.க. வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார். நேற்று முன்தினம் நள்ளிரவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில், ஊழலுக்கு எதிராக போராடிவரும் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கிய புதிய கட்சியான ஆம் ஆத்மி, சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எதிர்பாராத வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. டெல்லி மாநில முதலமைச்சராக பதவி ஏற்ற அரவிந்த் கெஜ்ரிவால், ஊழலுக்கு எதிரான வலுவான லோக்பால் சட்ட மசோதாவை நிறைவேற்ற முடியாததால் ஆட்சி பொறுப்பில் இருந்து விலகினார்.

ஆளும் காங்கிரஸ் மற்றும் பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகள் மீதும் கடும் தாக்குதல் தொடுத்துவரும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால், நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடி குஜராத்துக்கு வெளியே எங்கு போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவார் என்று அந்த கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடி போட்டியிடுவார் என்ற அறிவிப்பு வெளியானதும், அவரை எதிர்த்து கெஜ்ரிவால் போட்டியிடுவார் என்று ஆம் ஆத்மி கட்சியின் பொதுச்செயலாளரும், செய்தி தொடர்பாளருமான சஞ்சய்சிங் சூசகமாக தெரிவித்தார். இந்த முடிவு குறித்து பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை (நேற்று) நடைபெறும் பேரணியில் கெஜ்ரிவால் அறிவிப்பார் என்றும், அவர் கூறியிருந்தார்.

நேற்று பெங்களூர் பேரணியில் பேசிய கெஜ்ரிவால், நரேந்திர மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடும் பெரிய சவாலை ஏற்பதாக அறிவித்தார். அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் கெஜ்ரிவாலின் அறிவிப்பை மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

கெஜ்ரிவால் பேசும்போது கூறியதாவது:-

“கட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் நரேந்திர மோடியை எதிர்த்து நான் போட்டியிட வேண்டும் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது. இது மிகப்பெரிய சவால் என்று எனக்கு தெரியும். பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதோ, அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பதோ எங்கள் நோக்கம் அல்ல. இந்த நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்வதற்காகவே நாங்கள் அரசியலுக்கு வந்திருக்கிறோம்.

சுதந்திர போராட்ட தியாகி பகத்சிங் செய்ததைப்போல் இந்த நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தால், ஆசீர்வதிக்கப்பட்டவனாக நான் உணர்வேன். அதே நேரத்தில் வாரணாசியில் நான் போட்டியிடுவது குறித்து இன்றே எனது சம்மதத்தை தெரிவிக்க விரும்பவில்லை. 23 ஆம் தேதி அன்று வாரணாசியில் நடைபெறும் பேரணியில் நான் பேச இருக்கிறேன்.

வாரணாசியில் போட்டியிடுவதற்காக கட்சி எனக்கு டிக்கெட் வழங்குவதை முக்கியமானதாக நான் கருதவில்லை. வாரணாசியில் அன்று நடைபெறும் பேரணியில் மக்கள் எனக்கு ஒப்புதல் வழங்கினால், நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிடுவது குறித்த அறிவிப்பை வெளியிடுவேன்”.

இரு தொகுதியில் போட்டியிட முடிவு செய்திருக்கும் நரேந்திர மோடியின் முடிவை விமர்சித்த கெஜ்ரிவால், வாரணாசியில் போட்டியிடும் மோடி, தனது சொந்த மாநிலத்தில் பாதுகாப்பான ஒரு தொகுதியை தேடுவது, பிரதமர் பதவிக்கு அவர் பொருத்தமற்றவர் என்பதையே காட்டுவதாகவும், துணிச்சலான பிரதமர்தான் இந்த நாட்டுக்குத்தேவை என்றும், தாக்குதல் தொடுத்தார்.

இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil