வெளிநாட்டு வாழ் இந்தியர் நலனுக்காக புதிய நிதியம் ஒன்றை ஏற்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் துன்பப்பட்டால் அவர்களுக்கான பல்வேறு நலவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் செலவுகளை எதிர்கொள்வதற்காக 17 நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களுக்கு 'இந்திய சமூக நல நிதி'என்ற நிதியத்தை ஏற்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
வெளிநாடுகளில் வீட்டுப் பணிகளில் துன்பப்படும் இந்திய தொழிலாளர்கள் மற்றும் தொழில் திறனற்ற தொழிலாளர்களுக்கு தங்குமிட வசதி ஏற்படுத்தி கொடுத்தல், தேவைப்படும் இந்தியர்களுக்கு அவசரகால மருத்துவ சிகிச்சைகள் வழங்குதல், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை விமானத்தில் அனுப்பி வைத்தல், தகுதியான இந்தியர்களுக்கு துவக்க நிலை சட்ட உதவி வழங்குதல், இறந்தவர்களின் உடல்களை விமானம் மூலம் இந்தியாவுக்கு அனுப்புதல் அல்லது உள்ளூர் மயானங்களுக்கு அனுப்பி வைத்தல் மற்றும் அது தொடர்பான செலவுகளுக்காக இந்த நிதியம் ஏற்படுத்தப்படுகிறது.
வெளிநாடுகளில் உள்ள இடைத்தரகர்களால் ஏமாற்றப்படும் இந்திய தொழிலாளர்கள், விபத்துகளில் பலியாகும் வீட்டுப் பணிப் பெண்கள், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களால் கைவிடப்படும் வாழ்க்கைத் துணைவர்கள், முறையான ஆவணங்கள் இல்லாத தொழிலாளர்கள் ஆகியோர் இந்த நிதியம் மூலம் பயன் பெறுவர்.
இந்திய தூதரங்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் வெளிநாடுகளில் மரணமடையும் இந்திய குடிமக்களின் உடல்களை விமானம் மூலம் இந்தியாவுக்கு அனுப்பிவைப்பதற்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும்.
இந்திய பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.