சென்ற ஆண்டு வெளியான பருவ மாற்றம் குறித்த தேசிய செயல் திட்டம் நடைமுறைப் படுத்தப்படுவதைத் தொடர்ந்து எட்டு தேசிய இயக்கங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்ய நிதிநிலை அறிக்கையில் வகை செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்த நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இதனைத் தெரிவித்தார்.
பருவ மாற்றம் மற்றும் வளர்ச்சிப் பாதையில் நிலையான சூழலை மேம்படுத்துவதற்கான நெறிமுறைகளை இந்த செயல் திட்டம் கோடிட்டுக் காட்டியுள்ளது.
தேசிய ஆறு மற்றும் ஏரிகள் பாதுகாப்பு திட்டத்திற்காக அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக கூறிய பிரணாப், 2008-09இல் ரூ.335 கோடியாக இருந்த நிதி, 2009-2010இல் ரூ.562 கோடியாக உயர்ந்துள்ளது.
தேசிய கங்கை ஆற்றுப் படுகை ஆணையம் ஏற்கனவே துவங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பிரணாப், டேராடூனிலுள்ள இந்திய வன ஆய்வு மற்றும் கல்விக் குழு ஆய்வு கல்வி மற்றும் விரிவாக்க பிரிவு செய்த சிறப்பான சேவையை அங்கீகரிக்கும் வகையில் சிறப்பு நிதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்திய தாவரவியல் ஆய்வு மையம், விலங்கியல் ஆய்வு மையம் மற்றும் தேசிய நிலவியல் ஆய்வு மையம் ஒவ்வொன்றுக்கும் ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்படும் என அவர் மேலும் கூறினார்.