Newsworld News National 0907 06 1090706048_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் தனியார் மயம் இல்லை

Advertiesment
பிரணாப் முகர்ஜி
, செவ்வாய், 7 ஜூலை 2009 (18:24 IST)
நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படாது என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

மக்களவையில் இன்று 2009-10ஆம் நிதியாண்டிற்கான பொது நிதிநிலை அறிக்கையை அவர் தாக்கல் செய்து பேசுகையில் இதனைத் தெரிவித்துள்ளார்.

பொதுத்துறை நிறுவனங்கள் அரசின் சொத்து என்றும், அவற்றை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை என்றும் அவர் கூறினார்.

அவை பொதுத்துறை நிறுவனங்களாக தொடர்ந்து நீடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள வேறு முக்கிய அம்சங்கள் வருமாறு:

டெல்லியில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான நிதி ஒதுக்கீடு 3 ஆயிரத்து 472 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இது 2 ஆயிரத்து 112 கோடி ரூபாயாக இருந்தது.

இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (ஐஐடி) மற்றும் புதிய ஐஐடி-க்களுக்கான நிதி ஒதுக்கீடு ரூ. 2113 கோடியாக இருக்கும்.

துணை ராணுவப்படையினருக்கு சுமார் ஒரு லட்சம் குடியிருப்பு வசதிகள் கட்டப்படும்.

நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) செலவினம் முதல் முறையாக 10 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் 12 லட்சம் பேருக்கு ஜூலை மாதம் முதல் புதிய ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படும்.

சிறுபான்மை அமைச்சகத்திற்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு

அடுத்த ஒன்றரை ஆண்டுக்குள் நாடு முழுவதும் உள்ள குடிமக்களுக்கு சிறப்பு அடையாள அட்டை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்திற்காக 120 கோடி ரூபாய் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இன்ஃபோசிஸ் நிறுவனர்களில் ஒருவரான நந்தன் நீலகனி, அந்நிறுவனத்தின் வாரியத்தில் இருந்து விலகிய பின் இந்த திட்டத்தின் தலைவராக இருப்பார்.

தட்பவெப்பநிலை மாற்றத்திற்கான தேசிய நடவடிக்கை திட்டத்தின் கீழ் 8 தேசிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். அவற்றில் ஒரு திட்டமான தேசிய கங்கை திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 562 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 257 கோடி ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூகப்பாதுகாப்பு அளிக்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

தேசிய வேலைவாய்ப்பு அலுவலகங்களை நவீனமயமாக்கும் பணிகள் தொடங்கப்படும்.

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களின் கல்விக்கடனுக்கான வட்டி முழுவதும் மானியமாக வழங்கப்படும். இதன் மூலம் 5 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள்.

சிறுபான்மையினர், எஸ்.சி/ எஸ்.டி பிரிவைச் சேர்ந்த பெண்கள் தேசிய கல்வித் திட்டம் முழு அளவில் செயல்படுத்தப்படும். கிராமப்புற பெண்களில் 50 விழுக்காட்டினர் சுய உதவிக் குழுக்களின் கீழ் கொண்டு வரப்படுவார்கள்.

ராஷ்டிரிய மகிளா கோஷ் எனப்படும் மகளிர் குழுக்களுக்கான நிதி தற்போதுள்ள 100 கோடியில் இருந்து 500 கோடி ரூபாயாக அதிகரிக்கப்படும்.

தேசிய வீட்டுவசதி வங்கி மூலம் கிராமப்புற வீடுகளுக்கான நிதி 2 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கப்படும்.

இந்திரா அவாஸ் யோஜ்னா திட்டத்திற்கான நிதி 63 விழுக்காடு உயர்த்தப்பட்டு நடப்பு நிதியாண்டு முடிவில் 8 ஆயிரத்து 800 கோடி ரூபாயை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாரத் நிர்மாண் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 45 விழுக்காடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேசிய கிராமப்புற வேலை உறுதி திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் 4 கோடியே 74 லட்சம் பேர் பலன் அடைந்துள்ளனர்.

நடப்பு நிதியாண்டில் இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 39 ஆயிரத்து 100 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இது கடந்த நிதியாண்டைக் காட்டிலும் 144 விழுக்காடு அதிகம் என்றும் பிரணாப் முகர்ஜி கூறினார்.

ஏழைகளுக்கு குறைந்த விலையில் உணவு வழங்கும் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டப் பணிகள் ஏற்கனவே தொடங்கியுள்ளது.

தேசிய கிராமப்புற வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படுவோருக்கான ஊதியம் 100 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

`ஆம் ஆத்மி' எனப்படும் சாதாரண மக்களைக் கருத்தில் கொண்டே அரசின் திட்டங்களும், நிதி ஒதுக்கீடும் இருக்கும் என்று பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

வங்கிகள் இல்லாத பகுதிகளில் வங்கிகளை விரிவுபடுத்துவதற்கு ஒரே கட்ட நிதி ஒதுக்கீடாக 100 கோடி ரூபாய் வழங்கப்படும்.

வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களாகவே நீடிக்கும்.

வருமான வரி தாக்கல் செய்வது எளிமையாக்கப்படும்.
இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை நிர்ணயிப்பதற்கு அரசுக்கு தேவையான ஆலோசனை வழங்க நிபுணர்கள் குழு அமைக்கப்படும்.

கட்டமைப்புத் துறை வளர்ச்சியடையும் வகையில், புதிய திட்டங்களுக்கான கூடுதல் நிதியுதவி வழங்கக்கூடிய வழிமுறைகளை இந்திய கட்டமைப்பு நிதி கழகம் (IIFCL) உருவாக்கும். பொதுத்துறை - தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான வங்கிக் கடனில் 60 விழுக்காட்டை IIFCL வழங்கும்.

நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9 விழுக்காடு கட்டமைப்புத் துறை வளர்ச்சியாக இருக்கும்.

கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கும் திட்டங்களுக்காக 7 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு.

அடுத்த 4 ஆண்டுகளுக்குள் வருமான வரியை ஆன்லைனில் செலுத்துவது எளிமையாக்கப்படும். சரள் படிவம் -2 மீண்டும் அறிமுகப்படுத்தப்படும்.

அச்சு ஊடகங்களுக்கான (print media) ஊக்கத் திட்டம் மேலும் 6 மாத காலத்திற்கு வழங்கப்படும். பொருளாதார தேக்க நிலையைக் கருத்தில் கொண்டு அச்சு ஊடகங்களுக்கு இந்த சலுகை அளிக்கப்படுகிறது.

பொதுத்துறை நிறுவனங்களே தேசிய சொத்து. எனவே வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படாது.

விவசாயிகளுக்கே நேரடியாக மானியங்களை மாற்றும் முறை வகுக்கப்படும். நிதிப்பற்றாக்குறையை கட்டுப்படுத்த நிறுவன அளவிலான நடவடிக்கைகள் வகுக்கப்படும்.


Share this Story:

Follow Webdunia tamil