இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9% உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு செலவிடப்படும் என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.
2009-10ஆம் நிதியாண்டிற்கான நிதி நிலை அறிக்கையை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்யத் துவங்கியுள்ளார்.
உலகளாவிய அளவில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவின் காரணமாக இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 2008-09ஆம் ஆண்டில் குறைந்துள்ளது என்று பிரணாப் கூறினார்.
உலகப் பொருளாதாரப் பின்னடைவு காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் குறைந்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க எல்லா வழிகளிலும் முயற்சி மேற்கொள்ளப்படும்.
இந்தப் பக்கம் இடுகைகள் கூட்டப்படும்போது தானாகவே புதுப்பித்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
நிதி நிலை அறிக்கையின் மற்ற முக்கிய அம்சங்களாவன:
உயிரி எரிபொருள் (பயோ டீசல்) மீதான இறக்குமதி தீர்வை குறைக்கப்படுகிறது.
ஆட்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் நூலிழைகளின் மீதான உற்பத்தித் தீர்வை ஏற்கனவே இருந்த 8 விழுக்காடு மீண்டும் நடைமுறைக்கு வருகிறது.
கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களுடைய உயர்நிலை பணியாளர்களுக்கு அளிக்கும் கூடுதல் சலுகைகளின் மீதான வரி (எஃப்.பி.டி) ரத்து செய்யப்படுகிறது.
பெட்ரோலில் ஓடும் கார்களின் மீதான உற்பத்தித் தீர்வை குறைக்கப்படுகிறது.
தொலைக்காட்சிகளில் எல்சிடி பேனல்கள் மீதான இறக்குமதி தீர்வை குறைக்கப்படுகிறது.
வணிக முத்திரையுடன் கூடிய நகைகள் மீது விதிக்கப்பட்ட உற்பத்தித் தீர்வை ரத்து.
உணவு எண்ணெய் மீதான தீர்வையில் மாற்றமில்லை.
சட்ட ரீதியான ஆலோசனைகளுக்காக பெறப்படும் ஊதியத்தின் மீதும் சேவை வரி விதிக்கப்படும்.
வருமான வரி படிவங்களை சரிபார்க்க மையமான ஒரு அலுவலகம் உருவாக்கப்படும்.
தனிநபர் வருமான வரியின் மீது வசூலிக்கப்பட்டு வந்த பத்து விழுக்காடு மிகை வரி (சர்சார்ஜ்) ரத்து செய்யப்படுகிறது.
புதிதாக இந்திய தொழில்நுட்பக் கழகங்களை (ஐஐடி) அமைக்க ரூ.450 கோடி ஒதுக்கீடு.
பொருட்கள் வர்த்தகத்தின் மீது விதிக்கப்படும் வரி (கமாடிடி டிரான்ஸாக்சன் டாக்ஸ்) ரத்து செய்யப்படுகிறது.
புதிய ஓய்வூதியத் திட்டம் அறிவிக்கப்படும்.
ஊரக குடியிருப்பு கட்டுமானத்திற்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு.
இந்தியாவின் பாதுகாப்பிற்கான ஒதுக்கீடு ரூ.1,41,703 கோடியாக அதிகரிப்பு.
அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்படும் நன்கொடை மீது 100 விழுக்காடு வரிவிலக்கு.
தொலைக்காட்சி செட் டாப் பாக்ஸ் மீதான இறக்குமதி தீர்வை 5 விழுக்காடாக நிர்ணயிப்பு.
நேரடி வரி வருவாய் தொகுப்பில் இருந்து அளிக்கப்படும் வரிப்பங்கு 58 விழுக்காடாக உயர்வு.
அயல்நாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் தங்கத்தின் இறக்குமதி தீர்வை அதிகரிப்பு.
பருத்தி துணிகளின் மீதான உற்பத்தி தீர்வை ஏற்கனவே இருந்த நான்கு விழுக்காடு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்.
வருமான வரிக்கான ஆண்டு வருவாய் வரம்பு உயர்வு. இதுவரை 1,50,000 ரூபாயாக இருந்த ஆண்டு வருமான வரிக்கான வரிச்சலுகை, ரூ.1,60,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பெண்களுக்கான வருமான வரிக்கான வரிச்சலுகை ரூ.1,80,000இல் இருந்து ரூ.1,90,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்களுக்கான வரிச்சலுகை உச்சவரம்பு ஆண்டிற்கு 2.25 லட்சம் ரூபாயில் இருந்து 2.40 லட்சம் ரூபாயாகஉயர்த்தப்பட்டுள்ளது.
நிறுவன வருவாய் மீதான வருமான வரி விகிதத்தில் மாற்றம் ஏதுமில்லை.
வரிச் சீர்திருத்தம் செய்வது என்பதில் அரசு உறுதியாக உள்ளது.
புதிய நேரடி வரிக்கான குறியீடு 45 நாட்களில் உருவாக்கப்படும்.
இந்திய கல்விக் கழகங்களுக்கும் (ஐஐடி), தேச தொழில்நுட்ப மையங்களின் மேம்பாட்டிற்கும் ரூ.2,113 கோடி ஒதுக்கீடு.
உயர் கல்விக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தனியார் உதவியுடன் இணைய வழியிலான வேலை வாய்ப்பு நிலையம் உருவாக்கப்படும்.
இலங்கையில் போரினால் இடம்பெயர்ந்த தமிழர்களின் மறுவாழ்விற்காகவும், மறுகட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் ரூ.500 கோடி ஒதுக்கீடு. (இது ஏற்கனவே அறிவிக்கப்பட்டது)
ரூ.1 லட்சம் வரையிலான வீட்டுக் கடன்கள் மீதான வட்டிக்கு மானியம் வழங்கப்படும்.
இந்தியாவின் நிதிநிலை அறிக்கையில் செலவீனம் முதல் முறையாக 10 லட்சம் கோடிகளைத் தாண்டி உள்ளது.
மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு அளிக்கப்படும் கடன்களுக்கு மானியம் வழங்கப்படும்.
மானியங்களுக்கு ஒதுக்கிடப்படும் நிதி ஒதுக்கீடு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிக அதிகமாகும்.
பாதுகாப்பு செலவுகளுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்புத் திட்டம் கொண்டுவரப்படும்.
அடுத்த 3 ஆண்டுகளில் மகளிர் படிப்பறிவு இரண்டு மடங்காக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வேலை வாய்ப்பு அலுவலகங்கள் நவீனப்படுத்தப்படும்.
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களின் மேம்பாட்டிற்காக ரூ.350 கோடி கூடுதல் ஒதுக்கீடு.
ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் அனைவருக்கும், அவர்கள் வகித்து வந்த பணி நிலையின் அடிப்படையில் ஒரே அளவிலான ஓய்வூதியம் வழங்கப்படும்.
நமது நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் தேச அடையாள அட்டை அடுத்த 12 முதல் 18 மாதங்களில் அளிக்கப்படும்.
பிரதமரின் கிராம் சதக் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி 53 விழுக்காடு உயர்த்தப்படும்.
ஸ்மார்ட் கார்ட் திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள அனைத்துக் குடும்பங்களும் கொண்டு வரப்படும்.
தேச ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் ஒரு நாளைக்கான கூலி ரூ.80இல் இருந்து ரூ.100 ஆக உயர்த்தப்படுகிறது.
தேச ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் கடந்த 2008-09ஆம் நிதியாண்டில் பயன்பெற்றோர் எண்ணிக்கை 4.47 கோடிகளாகும்.
ஊரகப் பகுதிகளில் குடியிருப்புகளைக் கட்டித்தரும் பாரத் நிர்மாண் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 53 விழுக்காடு அதிகரிக்கப்படும்.
அரிசி, கோதுமை ஆகிய உணவுப் பொருட்கள் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் கிலோ ரூ.3க்கு வழங்கப்படும்.
மாணவர்களின் கல்விக் கடன்களின் மீதான வட்டிக்கு முழுமையான மானியம் வழங்கப்படும்.
இதனால் 5 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள்.
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்களின் விலை நிர்ணயம் குறித்து ஆராய நிபுணர் குழு அமைக்கப்படும்.
வருமான வரி பதிவு செய்ய படிவம் சரால் 2 அறிமுகப்படுத்தப்படும்.
உரங்களுக்கு வழங்கப்படும் மானியம் இதற்கு மேல் விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கப்படும்.
மத்திய அரசின் பொதுத் துறை வங்கிகள், தனியார் மயப்படுத்தப்படாது.
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு போதுமான கடன் அளிக்க சிறு தொழில் மேம்பாட்டு வங்கியின் மூலம் அளிக்கப்படும் கடன்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்படும்.
சமையல் எரிவாயு உற்பத்தி இரு மடங்காக உயர்த்தப்படும்.
இந்திரா காந்தி அவாஸ் யோஜனா திட்டத்திற்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீடு 63 விழுக்காடு அதிகரிக்கப்படும்.
2008-09 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.7 விழுக்காடாக இருந்தது, இதனை 9 விழுக்காடு அளவிற்கு மேம்படுத்த உரிய பொருளாதார திட்டங்களை மத்திய அரசு நடைமுறைப்படுத்தும்.
இளைஞர்களின் எதி்ர்பார்பை அதிகரிக்க நினைக்கிறேன் என்று கூறிய அமைச்சர் பிரணாப், ஆண்டிற்கு 1.2 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றார்.
நமது நாட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள மக்கட்தொகையை குறைக்க வேண்டும்.
விவசாய உற்பத்தி வளர்ச்சியை ஆண்டிற்கு 4 விழுக்காடு அளவிற்கு உயர்த்த வேண்டும்
நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்கவிக்கும் சக்தியாக தனியார் முதலீடு இருக்கும்.
எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய அது தொடர்பான அனைத்து கொள்கைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்படும்.
2008-09 நிதியாண்டில் அன்னிய நேரடி முதலீடு வரத்து குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளது.
2008 -09 நிதியாண்டில் இந்தியாவில் அயல்நாட்டு வர்த்தகம் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 39 விழுக்காடாக இருந்தது.
தேச நெடுஞ்சாலை மேம்பாட்டிற்கு கடந்த நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட நிதி மேலும் 23 விழுக்காடு அதிகரிக்கப்பட்டு இந்த நிதியாண்டிற்கு ஒதுக்கப்படுகிறது.
மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறை இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.7 விழுக்காட்டில் இருந்து 6.8 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
ரயில்வே துறைக்கு கடந்த நிதிநிலை அறிக்கையில் ரூ.10,800 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த நிதிநிலை அறிக்கையில் அது ரூ.15,800 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.