வன்னியில் தற்போது உருவாகியுள்ள நிலை குறித்து இந்திய அயலுறவுச் செயலர் சிவ் சங்கர் மேனனுடன் பேசுவதற்கு வருமாறு இந்திய அரசு விடுத்த அழைப்பை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் இந்த அழைப்பு ஏற்றுக்கொள்வதற்கில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் இந்தியா சென்றிருப்பதால், கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நேற்று கூட்டம் நடைபெற்றது.
வரும் 15, 16 ஆம் தேதிகளில் சிவ் சங்கர் மேனனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு புதுடெல்லிக்கு வருமாறு இந்தியா அழைப்பு விடுத்துள்ளதை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கிய மாவை சேனாதிராஜா, அவர்களுடைய கருத்துக்களைக் கேட்டார்.
போர் நிறுத்தம் ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் அக்கறையுடன் இந்தியா எதனையும் செய்யவில்லை எனச் சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் பேசுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்ட போதிலும் இதுவரையில் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தீவிரப்படுத்தப்பட்டுள்ள இராணுவ நடவடிக்கைகளால் பெருமளவு தமிழர்கள் கொல்லப்பட்டு வருகின்ற போதிலும் இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு இந்தியா ஆக்கபூர்வமான எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனச் சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள், தமிழ்நாட்டின் உணர்வுகளையும் மத்திய அரசு மதிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
'பாதுகாப்பு வலயம்' எனக் குறிப்பிடப்படும் சிறிய பகுதிக்குள் சுமார் இரண்டரை இலட்சம் மக்கள் அடக்கப்பட்டுள்ள நிலையில் கூட அரசாங்கப் படைகள் தாக்குதல்களை நடத்தி பெருமளவு இழப்புக்களை ஏற்படுத்திக்கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், இந்த நிலையில் போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதுதான் இந்தியாவின் பொறுப்பு எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை இந்தியா மேற்கொள்ளுமானால், இவ்வாறான பேச்சுவார்த்தையை நடத்துவதற்குத் தாம் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், ஆனால் தற்போதைய நிலையில் இந்த அழைப்பை ஏற்றுக்கொள்வது என்பது வன்னியில் தற்போது உருவாகியுள்ள நிலைமைகள் தொடர்பாக அனைத்துலகத்தில் உருவாகியிருக்கும் அக்கறையைத் திசை திருப்புவதாக அமைந்துவிடும் எனவும் தெரிவித்துள்ளனர்.