தரையில் இருந்து வான் இலக்குகளைத் தாக்கும் இடைத் தூர ஏவுகணைகளை வாங்குவது தொடர்பாக இஸ்ரேல் நிறுவனத்துடன் மத்திய அரசு செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தில் முறைகேடு உள்ளது என்ற குற்றச்சாற்றை பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி மறுத்துள்ளார்.
முறைகேடு நடந்துள்ளதை நிரூபிக்கும் தகுந்த ஆதாரங்கள் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு ஒருபோதும் தயங்காது என்றார் அவர்.
இதுகுறித்துத் திருவனந்தபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இஸ்ரேலுடன் இந்தியா செய்துகொண்டுள்ள ஒப்பந்தப்படி, முறைகேடுகள் ஏதாவது கண்டுபிடிக்கப்பட்டால் குறிப்பிட்ட நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை உடனடியாக இரத்து செய்யவும், அந்த நிறுவனத்திற்கு 5 ஆண்டுகளுக்குத் தடை விதிக்கவும் வழிகள் உள்ளன என்றார்.
ஏவுகணை ஒப்பந்தத்தின் எல்லா அம்சங்களையும் விரிவாகப் பரிசீலித்த பிறகே பாதுகாப்பிற்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கியது என்று தெரிவித்த அமைச்சர் அந்தோணி, இந்த ஒப்பந்தத்தில் இடைத்தரகர் என்று யாரும் குறுக்கிட முடியாது என்றார்.