உத்தரப்பிரதேச மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் பிலிபித் தொகுதியில் போட்டியிடும் வருண் காந்தி, தாம் அரசியல் சூழ்ச்சிக்கு பலியானதாக தெரிவித்துள்ளார்.
பிலிபித் தொகுதியில் சிறுபான்மையினருக்கு எதிராக தாம் பேசியதாக கூறப்படும் வீடியோ காட்சி ஜோடிக்கப்பட்டது எனக் கூறிய அவர், ஆதரமாகக் காட்டப்படும் வீடியோவில் பதிவாகியுள்ள குரல் தன்னுடையது அல்ல என்றார். எனவே மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்தார்.
தன்னை மதவாதி என்று சாயம்பூசத் திட்டமிட்டுள்ளதாகவும், சிறுபான்மையினருக்கு எதிராக தாம் தவறான வார்த்தைகள் எதையும் பிரசாரத்தின் போது பயன்படுத்தவில்லை என்றும் வருண் காந்தி கூறியுள்ளார்.
பிலிபித் தொகுதியில் சமீபத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தின் போது சிறுபான்மையினருக்கு எதிராக கருத்துத் தெரிவித்ததாக கூறப்பட்ட புகாருக்கு தேர்தல் ஆணையம் அவரிடம் விளக்கம் கேட்டது. இதுமட்டுமின்றி அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யும்படி மாவட்ட நிர்வாகத்திற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதன் காரணமாக வருண் காந்தி எந்த நேரமும் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது.