Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போர் பகுதியில் இருந்து தமிழர்கள் பாதுகாப்பாக வெளியேற உதவத் தயார்: இந்தியா

போர் பகுதியில் இருந்து தமிழர்கள் பாதுகாப்பாக வெளியேற உதவத் தயார்: இந்தியா
, செவ்வாய், 24 பிப்ரவரி 2009 (19:55 IST)
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கப் படைகளுக்கும் போர் நடக்கும் பகுதியில் சிக்கியுள்ள அப்பாவித் தமிழர்களை பாதுகாப்பாக வெளியேற்ற உதவத் தயார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

தங்கள் வாழ்விடங்களில் இருந்து வெளியேறி போர் நடக்கும் பகுதியில் சிக்கியுள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்க வேண்டும் என்று உலக நாடுகள் விடுத்த கோரிக்கையை பரிசீலிக்கத் தயார் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் கூறியதாக வெளிவந்த செய்திகளை அடுத்து இந்த அறிவிப்பை வெளியிடுவதாக அயலுறவு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

“தங்கள் வாழ்விடங்களில் இருந்து வெளியேறி போர் நடக்கும் பகுதிக்குள் சிக்கியுள்ள அப்பாவி மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற சிறிலங்க அரசும் மற்ற சர்வதேச நாடுகளும் முறையான, நம்பிக்கை வாய்ந்த ஒரு வழிமுறையை வகுக்க வேண்டும் என்றும், அது சர்வதேச அமைப்புகளின் கண்காணிப்பின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்றும் இந்தியா கோரிக்கை விடுக்கிறது.

பாதுகாப்பு வலையங்கள் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளின் நலனை இருதரப்பும் மதிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களில் ஒரு சிறிய பகுதியினர் கடல் வழியாக மீட்கப்பட்டுள்ளனர் என்று அறிகன்றோம். இதேபோல பாதிக்கப்பட்ட பெருவாரியான மக்களை சாலை வழியாகவும், கடல் வழியாகவும் மீட்கப்பட வேண்டும் என்று கோருகிறோம்.

அவ்வாறு மீட்கப்பட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துவரப்படும் மக்களுக்குத் தேவையான நிவாரணம், மருத்துவம் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளைச் செய்ய இந்தியா தயாராக உள்ளது.
காயமுற்ற, நோய் வாய்ப்பட்ட மக்களுக்குத் தேவையான மருந்துகளையும், மருத்துவ உதவிகளையும் அனுப்புவது தொடர்பாக சிறிலங்க அரசுடன் இந்திய அரசு விவாதித்து வருகிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவிற்கும், ஐ.நா. அமைப்பிற்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சார்பாக அதன் அரசியல் பிரிவிப் பொறுப்பாளர் ப.நடேசன் எழுதியுள்ள கடிதத்தின் இறுதிப் பகுதியில், “வன்னிப் பகுதியி்ல் வாழும் தமிழ் மக்களின் அவலங்களுக்கு முடிவு கட்டிட சர்வதேச சமூகம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி போர் நிறுத்தம் ஏற்பட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். அதன்மூல்ம் வன்னி மக்களுக்குத் தேவையான உணவு, மருத்துவம் ஆகியன கிடைத்திட வழியேற்படுத்திட வேண்டும்” என்று கூறிவிட்டு, “போர் நிறுத்தத்தை உடனடியாக நடைமுறைப்படுத்திடவும், அதனைத் தொடர்ந்து அரசியல் தீர்வு காண்பதற்கும் உரிய வழிமுறைகளை ஆராயவும் ஒத்துழைக்க நாங்கள் தயாராக உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றுதான் கூறியுள்ளார்கள்.

போர் நிறுத்தம் செய்யாமல் வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்து விடுதலைப் புலிகள் எதையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil