தனது வாடிக்கையாளர்களின் கணக்கு விவரங்களை அமெரிக்க அரசிற்குத் தருவதாக சுவிஸ் வங்கிகளில் ஒன்று ஒப்புக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதை அடுத்து, இந்திய வாடிக்கையாளர்களின் கணக்கு விவரங்களை மத்திய ஐ.மு.கூ. அரசு கேட்டுப்பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் அரசியல் தலைமைக்குழு இன்று விடுத்துள்ள அறிக்கையில், நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் இந்தியர்கள் ஈடுபடுவதைக் கண்டுபிடிக்கும் வகையில், சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் வைத்துள்ள கணக்குகளின் விவரங்களைப்பெற மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பெருமளவில் வரி ஏய்ப்பு செய்துள்ள நபர்களின் கணக்கு விவரங்களை அமெரிக்காவிற்குத் தருவதற்கு மிகப்பெரிய சுவிஸ் வங்கியான யுஎஸ்பி ஒப்புக்கொண்டுள்ளதையும், இதுபோன்றதொரு நடவடிக்கைக்கு பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரெளன் அழைப்பு விடுத்துள்ளதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கருப்புப் பணத்தைக் கண்டுபிடித்துப் பறிமுதல் செய்வது, வரி ஏய்ப்பு, நிதி மோசடி உள்ளிட்ட குற்றங்களைத் தடுப்பது ஆகியவற்றில் மத்திய அரசு உண்மையான அக்கறையை கொண்டிருக்குமானால், சுவிஸ் வங்கிகளின் இரகசியக் கணக்குகளில் இந்தியர்கள் குவித்துள்ள நிதி விவரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.