நுரையீரல் தொற்றால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னால் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு அளிக்கப்பட்ட செயற்கைச் சுவாசம் நீக்கப்பட்டுள்ளது.
முன்னால் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், நுரையீரல் தொற்றால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பிப்ரவரி 3ஆம் தேதி புது டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருடைய நுரையீரலில் தொற்று அதிகரித்து நிமோனியாவாக மாறியதால், பொதுப் பிரிவில் இருந்து தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு பிப்ரவரி 6ஆம் தேதி மாற்றப்பட்டார்.
அவருக்கு சுவாசக் கோளாறு சிகிச்சை நிபுணர் மருத்துவர் ரந்தீப் குலேரியா, இதயநோய் சிகிச்சை நிபுணர் மருத்துவர் சம்பத் குமார் ஆகியோர் உட்பட 6 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். வாஜ்பாய்க்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் அவருக்கு செயற்கைச் சுவாசம் அளிக்கப்பட்டது.
தீவிர சிகிச்சையின் காரணமாக நேற்றிரவு வாஜ்பாயின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதனால் அவருக்கு அளிக்கப்பட்டிருந்த செயற்கை சுவாசம் நீக்கப்பட்டு, அதற்கான கருவிகள் அகற்றப்பட்டன என்று எய்ம்ஸ் மருத்துவமனைக் கண்காணிப்பாளர் மருத்துவர் டி.கே. சர்மா தெரிவித்தார்.
இதற்கிடையில், பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங், பஞ்சாப் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் ஆகியோர் நேற்று எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்து வாஜ்பாயின் உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தனர்.