மும்பை பயங்கரவாதத் தாக்குதல் விசாரணையில் தேவைப்பட்டால் அமெரிக்க உள் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ. ஆதாரங்களை வழங்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறினார்.
பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு மராட்டியத்தில் பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம், மும்பை தாக்குதல் விசாரணையில் எஃப்.பி.ஐ. நமக்கு உதவுகின்றனர். தேவைப்பட்டால், விசாரணையில் கிடைத்துள்ள ஆதாரங்களை அவர்கள் வழங்குவர் என்றார்.
மும்பை பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக நாம் தந்துள்ள ஆதாரங்களின் மீது பாகிஸ்தான் உடனடியாகப் பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், பாகிஸ்தான் பதிலளித்த பிறகுதான் நான் கருத்துக்கூற முடியும் என்றார்.
மும்பை தாக்குதல்கள் வங்கதேசம் அல்லது ஐரோப்பாவில் திட்டமிடப்பட்டு இருக்கலாம் என்று பாகிஸ்தான் கூறியுள்ளதாக ஊடகங்களில் வெளியான தகவல்கள் குறித்துக் கேட்டதற்கு, "அது அறிவுகெட்ட வார்த்தைகள்" என்ற அமைச்சர் சிதம்பரம், "பாகிஸ்தான் அதை உங்களிடமோ அல்லது என்னிடமோ கூறவில்லை. பத்திரிகை செய்திகளை மட்டும் நம்பாதீர்கள்" என்றார்.