நமது நாட்டின் தனி நபர் வருமானம் 2008-09 இல் ரூ.38,084 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இரண்டு மடங்காகும். சராசரி இந்தியரின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டுள்ளதன் எதிரொலி இது என்று கருதப்படுகிறது.
மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள தேச வருமான நிலவரம் தொடர்பான முன்கூட்டிய திட்ட மதிப்பீட்டு அறிக்கையின்படி, தனி நபர் வருமானம் இந்த நிதி ஆண்டில் 14.4 விழுக்காடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே ஆண்டில் இவ்வளவு அதிகரிப்பது கடந்த 10 ஆண்டில் இதுவே முதல்முறை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரத்தில், கடந்த நிதி ஆண்டில் 9ஆக இருந்த ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் இந்த நிதி ஆண்டில் 7.1 ஆகக் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கும் நாட்டின் தனி நபர் வருமானம் 2002-03 இல் ரூ.18,885ஆக இருந்தது.
ஒரு ஆண்டிற்கு முன்பு 113.8 ஆக இருந்த நமது நாட்டின் மக்கள் தொகை மார்ச் 2009இல் 115.4 கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு மக்கள் தொகை அதிகரிக்கும் அதே நேரத்தில் தனி நபர் வருமானமும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.