அடுத்து நடக்கவுள்ள சோதனைகள் வெற்றிபெறும் வரை பிரம்மோஸ் ஏவுகணை இராணுவத்தில் அதிகாரப்பூர்வமாகச் சேர்க்கப்பட மாட்டாது என்று இராணுவத் தலைமைத் தளபதி தீபக் கபூர் கூறினார்.
இந்திய- இரஷ்ய கூட்டுத் தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ள, அணு ஆயுதத்துடன் செங்குத்தாகப் பாய்ந்து, 290 கிலோ மீட்டர் தொலைவு வரையிலான தரை இலக்கைத் தாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள அதிவேக பிரம்மோஸ் ஏவுகணை கடந்த மாதம் சோதனை செய்யப்பட்டது.
இராஜஸ்தானில் தார் பாலைவனத்தில் நடந்த இந்தச் சோதனை தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக வெற்றிபெறவில்லை.
இந்நிலையில், பி.டி.ஐ. நிறுவனத்திற்கு பேட்டியளித்த இராணுவத் தலைமைத் தளபதி தீபக் கபூரிடம், இந்த ஏவுகணை அதிகாரப்பூர்வமாக இராணுவத்தில் சேர்க்கப்படுமா என்று கேட்டதற்கு 'இல்லை' என்று பதிலளித்தார்.
"நாங்கள் (இராணுவம்) இங்கு நுகர்வோராக உள்ளோம். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை அடுத்து நடத்தக்கூடிய சோதனைகள் வெற்றிபெற்ற பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க விரும்புகிறோம். எப்போதெல்லாம் சோதனை வெற்றிபெறுகிறதோ அப்போதெல்லாம் நாங்கள் அவர்களை வாழ்த்தியுள்ளோம்" என்றார்.
பிரம்மோஸ் ஏவுகணை சோதனை தோல்வியடைந்த தகவலை இராணுவம்தான் கசியவிட்டது என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை புகார் தெரிவித்துள்ளது பற்றிக்கேட்டதற்கு, "ஏவுகணை சோதனை வெற்றிபெற்றுள்ளது என்று முதலில் அவர்கள்தான் கூறினர். அப்போதுகூட இராணுவம் அமைதி காத்தது" என்றார் தீபக் கபூர்.