வானில் எழும்புவதற்காக ஓடு பாதையில் வேகமாக ஓடிக் கொண்டு இருந்த பயணிகள் விமானத்தின் விமானி, எதிரில் இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று தரையிறங்குவதைக் கண்டதும், அவசரகாலப் பிரேக்-ஐ பயன்படுத்தி விமானத்தை நிறுத்தியதால் மும்பை விமான நிலையத்தில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
மும்பையில் இருந்து டெல்லி செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஐ.சி.-866, இன்று காலை 150 பயணிகளுடன் மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது.
பயணிகள் ஏறுமிடத்தில் இருந்து ஓடு பாதைக்கு வந்த விமானம் வானில் எழும்புவதற்காக வேகமாக ஓடிக்கொண்டிருந்தபோது, எதிரில் ஓடு பாதையின் நடுவில் இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று திடீரென்று தரை இறங்கியது.
இதைப் பார்த்த விமானத்தின் விமானி அவசரகாலப் பிரேக்-ஐப் பயன்படுத்தி விமானத்தை நிறுத்தினார். 2 கிலோ மீட்டர் நீளமுள்ள ஓடு பாதையில் சுமார் 1.5 கிலோ மீட்டர் வரை வந்துவிட்ட பிறகு, பிரேக் பிடித்தமையால், வேகம் தாளாமல் விமானத்தின் சக்கரங்கள் வெடித்துச் சிதறின.
இதையடுத்து உடனடியாக விமானம் பயணிகள் தளத்திற்குக் கொண்டு வரப்பட்டது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
கோடியா என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மும்பை வந்துள்ள குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் அணிவகுப்பில் வந்த ஹெலிகாப்டர்தான் ஓடு பாதையில் தரையிறங்கியுள்ளது.
மும்பை விமான நிலையத்தில் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் போக்குவரத்தை அங்குள்ள வான்வழி போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைதான் கண்காணிக்கிறது. இங்கிருந்துதான் சம்பந்தப்பட்ட விமானத்திற்கும் ஹெலிகாப்டருக்கும் ஒரே ஓடு பாதையைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.