ராமர் மீது பாரதிய ஜனதா கட்சி வைத்திருக்கும் நம்பிக்கையை யாராலும் குலைக்க முடியாது என்றும், அயோத்தியில் ராமருக்குக் கோயில் கட்டுவதையும் தடுக்க முடியாது என்றும் பாஜக கூறியுள்ளது.
நாக்பூரில் இன்று தொடங்கிய பாஜக தேசியக் குழு கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் இதனைத் தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வருவதையொட்டி, மீண்டும் ராமர் கோயில் பிரச்சினையை பாஜக எழுப்பியுள்ளது.
ராமர் குறித்த பாஜக-வின் நிலைப்பாட்டை யாராலும் அசைத்து விட முடியாது என்றும், அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டியே தீருவோம் என்றும் அவர் கூறினார்.
ராஜ்நாத் சிங் இவ்வாறு கூறிய போது, `ஜெய் ஸ்ரீராம்' என்ற ஒலி தேசியக் குழு உறுப்பினர்கள் மத்தியில் இருந்து எழுந்தது.
அயோத்தி பிரச்சினை, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 370வது சட்டப்பிரிவை மாற்றி அனைவருக்கும் பொதுவான நிலையை ஏற்கனவே கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த போது பாஜக கொண்டிருந்தது. என்றாலும் கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பால் அந்தப் பிரச்சினைகள் கிடப்பில் போடப்பட்டன.
ஆனால் தற்போது மக்களவைத் தேர்தலைச் சந்திக்கவுள்ள நிலையில், அப்பிரச்சினையை ராஜ்நாத் சிங் எழுப்பினார்.
ராமஜென்ம பூமியான அயோத்தி பிரச்சினையை தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தையைத் தொடங்க 5 நிமிட நேரத்தைக் கூட காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் ஒதுக்க முடியவில்லை என்று அவர் குறைகூறினார்.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால், நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள அயோத்தி பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்றும், இப்பிரச்சினையை முடிவுக்கும் கொண்டுவர விரைவு நீதிமன்றத்தை அமைக்க முடியும் என்றும் ராஜ்நாத் கூறினார்.
பாஜக பெரும்பான்மை பெற்றால், அயோத்தி பிரச்சினைக்காக சட்டம் ஒன்றைக் கொண்டு வருவோம் என்றும் அவர் கூறினார்.