மும்பைத் தாக்குதல் தொடர்பாக அளித்த ஆதாரங்களின் மீது நடத்தப்பட்ட புலனாய்வு பற்றி பாகிஸ்தான் தரப்பில் இருந்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தொடர்பும் தெரிவிக்கப்படவில்லை என இந்தியா இன்று தெரிவித்துள்ளது.
கொல்கட்டாவில் முர்ஷிதாபாத் எக்ஸ்பிரஸ் ரயிலை இன்று துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மும்பை தாக்குதல் புலனாய்வு தொடர்பாக பாகிஸ்தான் அதிகாரிகளிடம் இருந்து இதுவரை தமக்கு எந்தத் தகவல் தொடர்பும் மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறினார்.
பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி அல்லது பாகிஸ்தான் அதிகாரிகள் தரப்பில் இருந்து இதுதொடர்பாக தொடர்பு கொண்டு தெரிவிக்கப்பட்டால் அன்றி பாகிஸ்தான் நடத்தி வரும் புலனாய்வு பற்றி தாம் எந்தக் கருத்தும் தெரிவிக்க முடியாது என்றும் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத சக்திகளுக்கு தொடர்புள்ளதாக தெரிவிக்கும் இந்தியாவின் ஆதாரங்களின் மீது இதுவரை நடத்தப்பட்ட புலனாய்வு பற்றிய அறிக்கை திங்கள் (இன்று) அல்லது செவ்வாய் கிழமைக்குள் வெளியிடப்படும் என பாகிஸ்தான் தெரிவித்திருந்தது நினைவில் கொள்ளத்தக்கது.