நாட்டின் 80 ஆண்டு கால பாரம்பரிய பழமை வாய்ந்த குடியரசுத் தலைவர் மாளிகையை பசுமையாக மாற்றியமைத்து, சுற்றுச்சூழல் மாசு இல்லாத நிலையை உருவாக்குவதே இந்த ஆண்டின் முக்கிய நோக்கம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிசக்தியை சேமிப்பது, பாறைகளில் அழகிய வடிவங்களை வடித்து தோட்டமாக அமைப்பது மற்றும் மாதிரி நகரமாக (ideal township) உருவாக்குவதும் இந்த முன்னோடித் திட்டத்தில் அடங்கும் என்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் செயலாளர் டாக்டர் கிறிஸ்டி எல் பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.
புதிய தோட்டங்களை அமைப்பதுடன், புதுடெல்லிக்கு முதன்முறையாக பாறைத் தோட்டத்தையும் உருவாக்கித் தர `ரோஷினி' என்ற பெயரிலான இத்திட்டம் வகை செய்கிறது என்று அவர் கூறினார்.
சண்டிகர் மாநிலத்தில் உள்ள பாறைத் தோட்டம் போன்று புதிய, வித்தியாசமான காட்சிகளுடன் இந்த ஆண்டு இறுதிக்குள் இத்திட்டம் நிறைவேற்றி முடிக்கப்படும் என்றும், இதற்கான பணியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள பெண்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு இறுதியில் அறிவிக்கப்பட்ட ரோஷினி திட்டம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும், குடியரசுத் தலைவர் மாளிகையை ஒரு மாதிரி டவுன்ஷிப்பாக மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.
மின்சாரத்தை சேமிப்பதற்கான வழிமுறைகள், கழிவுகளை மறுசுழற்சி முறையில் பயன்படுத்துவது போன்றவை இத்திட்டத்தில் அடங்கும்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் மொத்தம் உள்ள 355 அறைகளையும் சுற்றுப்புறச் சூழல் இல்லாத வகையில் உருவாக்குவதும் இதில் அடங்கும்.
கழிவுகளை அழித்து கரிம உரமாக மாற்றும் கருவி ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ளது.
சூரிய சக்தி அமைப்பிற்காக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (Renewable Energy) அமைச்சகம் 3 கோடி ரூபாய் அனுமதித்துள்ளது. இதன்மூலம் மாளிகையில் உள்ள விளக்குகள் சூரிய சக்தியில் இயக்கப்படும்.
இது படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும், இந்த ஆண்டு இறுதிக்குள் ரோஷினி திட்டம் நிறைவடையும் என்றும் பெர்னாண்டஸ் தெரிவித்தார்.
பாறைத் தோட்டத்தைப் பொருத்தவரை முற்றிலும் இயற்கையானதாக இருக்கும் என்றும், அண்மையில் அரங்கம் ஒன்று கட்டுவதற்காக தோண்டிய கட்டிட இடிபாடுகளை நீக்கிய போது, இருந்த பாறைகளைப் பார்த்த பிறகே இத்தோட்டம் அமைக்கும் எண்ணம் உதித்ததாகவும் அவர் கூறினார்.
இத்திட்டம் நிறைவடைந்ததும் ஒவ்வொரு சனிக்கிழமையும் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள மொஹல் தோட்டம் பொதுமக்கள் பார்வைக்காக இன்று முதல் வரும் 14ஆம் தேதி வரை திறக்கப்பட்டுள்ளது.