சுவாசக் கோளாறு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நமது நாட்டின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே உள்ளார். அவருக்குச் செயற்கைச் சுவாசம் தரப்படுகிறது.
வாஜ்பாயின் உடல்நிலை குறித்த மருத்துவக் குறிப்பை இன்று மாலை வாசித்த இதய நோய் நிபுணர் மருத்துவர் சம்பத் குமார், "வாஜ்பாய்க்கு ஏற்பட்டுள்ள சுவாசத் தொற்று இன்று காலை முதல் மோசமடைந்துள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு செயற்கைச் சுவாசம் தரப்படுகிறது. மருத்துவக் குழுவினர் அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்" என்றார்.
தற்போது 84 வயதாகும் வாஜ்பாயின் இரத்த அழுத்தம், கல்லீரல் செயல்பாடு, சிறுநீரகச் செயல்பாடு உள்ளிட்ட அடிப்படை சோதனை முடிவுகள் அனைத்தும் சாதாரணமாக உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக எய்ம்ஸ் மருத்துவக் கண்காணிப்பாளர் மருத்துவர் டி.கே. சர்மா இன்று காலை விடுத்த மருத்துக் குறிப்பில், "வாஜ்பாய் இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவில்தான் உள்ளார். அவருடைய மார்பில் தொற்று ஏற்பட்டுள்ளது. அவரது உடல்நிலை மருத்துவக் குழுவினரால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. அவர் சிகிச்சைக்கு நல்லமுறையில் ஒத்துழைக்கிறார்" என்று கூறியுள்ளார்.