பா.ஜ.க.வும் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் அறிவித்துள்ள பிரதமர் வேட்பாளர் லால் கிருஷ்ண அத்வானிக்கு எதிராகப் போட்டியிடும் தங்களின் பிரதமர் வேட்பாளரை அறிவிக்க காங்கிரஸ் கட்சியும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் தயாரா? என்று பா.ஜ.க. சவால் விடுத்துள்ளது.
வருகிற மக்களவைத் தேர்தலில் தாங்கள் யார் தலைமையில் போட்டியிடப் போகிறோம் என்பதையும், தனது பிரதமர் வேட்பாளர் பெயரையும் காங்கிரஸ் அறிவிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ள பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங், எல்.கே. அத்வானி ஒரு மூத்த தலைவர், நமது நாட்டிற்காக அகண்ட தொலைநோக்குப் பார்வை உள்ளதும் முடிவெடுக்கும் திறனுடையதுமான தலைமையைத் தர வல்லவர் என்று குறிப்பிட்டார்.
நமது நாட்டை முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் நோக்கி தொடர்ந்து முன்னெடுத்துச்செல்ல அத்வானிதான் சரியான நபர் என்று குறிப்பிட்ட ராஜ்நாத் சிங், "ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் உள்ள குழப்பம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள நமது நாடு விரும்புகிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்?" என்று கேள்வி எழுப்பினார்.
கடந்த 1999 மக்களவைத் தேர்தலைப் போலவே இப்போதும் பா.ஜ.க.வும் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் இணைந்து பணியாற்றி அத்வானியை அடுத்த பிரதமராக ஆக்குவதுடன், சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றுவோம் என்று கூறிய அவர், "அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக வேண்டும் என்று நாங்கள் கண்ட கனவு, கடந்த 1999 மக்களவைத் தேர்தலில் மக்கள், கட்சி ஊழியர்கள், ஆதரவாளர்களின் முயற்சியினால் நனவாகியது. இப்போது அத்வானி அடுத்த பிரதமராக வேண்டும் என்று நாங்கள் கனவு காண்கிறோம்" என்றார்.
அண்மையில் நடந்துள்ள சட்டப்பேரவைத் தேர்தல்கள், இடைத் தேர்தல்களில் பா.ஜ.க. 294 இடங்களில் வெற்றிபெற்றுள்ள வேளையில், காங்கிரஸ் கட்சி 244 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது என்று ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.