மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு - தனது செயல்பாடின்மையையும், தனது மந்தமான பொருளாதாரக் கொள்கைகளால் நமது நாட்டை புதிய பிரச்சனைகளுக்கு இழுத்துச் சென்றதையும் மறைத்து- தேர்தலைச் சந்திப்பதற்காகவே போர் முழக்கத்தை எழுப்பி வருகிறது என்று பா.ஜ.க. குற்றம்சாற்றியுள்ளது.
வரவிருக்கும் மக்களவைத் தேர்தலிற்குத் தயாராவது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக பா.ஜ.க.வின் தேசியச் செயற்குழுக் கூட்டம் மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது.
இந்தக் கூட்டத்தைத் துவக்கி வைத்துப் பேசிய பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங், "அண்மையில் கூட பொதுக் கூட்டம் ஒன்றில் பேசியுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானின் மீது நேரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார். அரசியல் ஆதாயத்திற்காக போர் முழக்கம் எழுப்பப்படுகிறது. இது நமது நாட்டிற்கு நல்லதல்ல" என்றார்.
துவக்க நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க. பேச்சாளர் ரவி சங்கர் பிரசாத், காங்கிரஸ் தலைவரால் உருவாக்கப்பட்டுற்ற போர்ப் பதற்றத்தை, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் கார்கிலை ஆக்கிரமித்த பாகிஸ்தான் படையினரை வெளியேற்ற இந்தியா எடுத்த நடவடிக்கையுடன் ஒருபோதும் ஒப்பிட முடியாது என்றார்.