மும்பை தாக்குதல்களில் வங்கதேச பயங்கரவாத அமைப்பான ஹியூஜிக்குத் தொடர்பு இருக்கக் கூடும் என்று பாகிஸ்தான் கூறியுள்ளதை மராட்டிய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்தியாவை மோசடி செய்ய பாகிஸ்தான் முயல்வதாகக் குற்றம்சாற்றிய மராட்டிய உள்துறை அமைச்சர் ஜெயந்த் பாட்டீல், மும்பைத் தாக்குதல்களை லஸ்கர் ஈ தயீபா இயக்கம்தான் திட்டமிட்டு நடத்தியுள்ளது என்றார்.
மும்பை பயங்கரவாதத் தாக்குதலின்போது பிடிபட்ட ஒரே பயங்கரவாதியான அஜ்மல் கசாப், தான் பாகிஸ்தான் குடிமகன் என்பதை ஒப்புக்கொண்டதோடு, பாகிஸ்தானைச் சேர்ந்த லஸ்கர் ஈ தயீபா இயக்கத்தின் முக்கிய நபர்கள் பலரின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார். மும்பைத் தாக்குதல்கள் பாகிஸ்தான் மண்ணில்தான் திட்டமிடப்பட்டது என்பதையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதற்குத் தோதாக, மும்பையைத் தாக்கிய பயங்கரவாதிகள் பயன்படுத்திய குஜராத் மாநில மீன்பிடி படகில் சேகரிக்கப்பட்ட தடயங்களில் உள்ள மரபணுவும், பயங்கரவாதி அஜ்மலின் மரபணுவும் ஒத்துப்போயுள்ளதாக நேற்று வெளியான தடய அறிவியல் ஆய்வு முடிவுகள் தெரிவித்தன.