மார்புத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், சிகிச்சைக்கு அவர் நல்லமுறையில் ஒத்துழைக்கிறார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பா.ஜ.க.வின் மூத்த தலைவரும் நமது நாட்டின் முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் மார்பு வலி காரணமாக டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் (எய்ம்ஸ்) அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவக் கண்காணிப்பாளர் மருத்துவர் டி.கே. சர்மா இன்று மருத்துவமனையின் இதழில், "வாஜ்பாய் இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவில்தான் உள்ளார். அவருடைய மார்பில் தொற்று ஏற்பட்டுள்ளது. அவரது உடல்நிலை மருத்துவக் குழுவினரால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. அவர் சிகிச்சைக்கு நல்லமுறையில் ஒத்துழைக்கிறார்" என்று கூறியுள்ளார்.
வாஜ்பாய்க்குச் சிகிச்சை அளித்து வரும் மருத்துவக் குழுவினர்களிடம் இது குறித்துக் கேட்டதற்கு, அவர்கள் மேற்கொண்டு எந்த விவரங்களையும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.