பயங்கரவாதத்திற்கு தனது மண்ணில் முடிவு கட்டப்படும் என்று பாகிஸ்தான் அளித்துள்ள வாக்குறுதி நிறைவேற்றப்படுவதை ஐக்கிய நாடுகள் அவை உறுதி செய்ய வேண்டும் என்று இந்தியா கூறியுள்ளது.
மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களில் பாகிஸ்தானியர்களுக்கு உள்ள தொடர்பு குறித்து நேற்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி- மூனிடம் விளக்கிய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு பாகிஸ்தானை வற்புறுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
இந்தச் சந்திப்பு குறித்து, டெல்லியில் இன்று நடந்து வரும் உலகளாவிய பொருளாதார நெருக்கடி குறித்த மாநாட்டின் இடையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில்,
"மும்பை பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்தும், அவற்றில் பாகிஸ்தானியருக்கு உள்ள தொடர்பு குறித்து அந்நாட்டு அரசுடனும், அயலுறவு அமைச்சர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதங்கள் மூலமாக ஒட்டுமொத்த சர்வதேசச் சமூகத்துடனும் இந்தியா பகிர்ந்துகொண்ட தகவல்கள் குறித்தும் நாங்கள் இருவரும் விரிவாக விவாதித்தோம்.
பயங்கரவாதத்திற்குத் தனது மண்ணில் முடிவு கட்டப்படும் என்று இந்திய அரசிற்கும், சர்வதேசச் சமூகத்திற்கும் பாகிஸ்தான் அரசு பலமுறை வழங்கியுள்ள வாக்குறுதி முழுமையாக நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று பான்-கி மூனிடம் நான் கேட்டுக்கொண்டேன்.
தனது மண்ணிலிருந்து செயல்படும் பயங்கரவாதிகளை வேரறுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானிற்கு ஐ.நா. அழுத்தம் தர வேண்டும்" என்றார்.
மேலும், இந்தத் தாக்குதல்கள் எவ்வாறு பாகிஸ்தானில் திட்டமிடப்பட்டு அந்நாட்டு சக்திகளால் இங்கு நடத்தப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் இந்தியாவிடம் உள்ள மறுக்க முடியாத ஆதாரங்களையும் பான் கி-மூனிடம் பிரணாப் முகர்ஜி வழங்கியிருக்கிறார்.
இந்த ஆதாரங்கள் ஏற்கெனவே பாகிஸ்தானிடம் வழங்கப்பட்டுள்ளதும், அதன் அடிப்படையில் குற்றவாளிகளுக்கு எதிராகப் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா எதிர்பார்த்துக் காத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.