ஆந்திர மாநிலத்தில் வாழும் பெண்கள் தங்களின் வயதான காலத்தில் உதவித் தொகை பெற வகை செய்யும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை அம்மாநில அரசு அறிமு கப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின்படி 60 வயதைக் கடந்த பெண்களுக்கு மாதம் 2,500 ரூபாய் வரை கிடைக்கும்.
ஏழை மற்றும் நடுத்தரப் பெண்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் ஒன்றை ஆந்திர மாநில அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தில் சேர விரும்பும் பெண் கள் மாதந்தோறும் ரூ.30 செலுத்த வேண்டும். அவர்களுக்கு மாநில அரசின் சார்பில் மாதந்தோறும் ரூ.30 செலுத்தப்படும்.
ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்த பெண்கள் 60 வயதைக் கடந்த பிறகு மாதம் .2,500 ரூபாய் வரை ஓய்வூதியமாகப் பெறலாம். மேலும் இத்திட்டத்தில் உறுப்பினராகச் சேர்ந்த பெண் விபத்தில் உயிரிழக்க நேரிட்டால்,.அவரது குடும்பத்திற்கு 75 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.
இந்த ஓய்வூதியத் திட்டம் குறித்து ஆந்திர முதல் அமைச்சர் ராஜசேகர ரெட்டி கூறுகையில், ஆந்திராவில் உள்ள அனைத்து பெண்களும் தங்களின் முதுமைக் காலத்தில் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் இக்குழுவில் ஒரு ஆண்டு உறுப்பினராக இருந்தவர்கள் உடனடியாக சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று அவர் கூறினார்.
18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவரும் இத்திட்டத்தில் சேர தகுதி உடையவர்கள் என்றும், ஓய்வூதியத் திட்டம் மூலம் 25 லட்சம் பெண்கள் பயன் அடை வார்கள் என்றார்.