பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளைச் சமாளிக்க இன்னும் அதிகமான முயற்சிகளை வளரும் நாடுகள் முன்னெடுக்க வேண்டும் என்றும், இப்பிரச்சனைக்குத் தீர்வுகாண்பதில் தொழில்மயமான நாடுகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் ஐ.நா. வேண்டுகோள் விடுத்தது.
தலைநகர் டெல்லியில் 'நீடித்த வளர்ச்சி' தொடர்பான கருத்தரங்கம் ஒன்றில் பேசிய ஐ.நா. பொதுச் செயலர் பான்-கி மூன், "உயிரி- எரிபொருள் பயன்பாடு, வனங்களைப் பெருக்குதல் ஆகியவற்றில் பிரேசில் மிகவும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்தியாவும் சீனாவும்கூட முயற்சிகளை மேற்கோண்டுள்ளன. ஆனால் அவை போதாது. இவர்கள் இன்னும் முயற்சிக்க வேண்டும்" என்றார்.
பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளுக்குத் தீர்வுகாண்பதில் உலக நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும். பொறுப்புகளைப் பங்கிட்டுக்கொள்ள வேண்டுமே தவிர, உலகம் வெப்பமயமாதலை முறியடிக்க யார் அதிகம் நடவடிக்கை எடுத்தார்கள் என்றோ அல்லது உலகம் வெப்பமயமாதலுக்கு யார் அதிகக் காரணம் என்றோ விவாதித்துக்கொண்டிருப்பதில் எந்தப் பயனும் இல்லை என்றார் அவர்.
"யாருக்கு அதிகப் பொறுப்பு இருக்கிறது, யாருக்குக் குறைவான பொறுப்பு இருக்கிறது என்று நாம் வாதம் செய்யக்கூடாது. இது ஒரு பொதுவான, பங்கிடப்பட்டுச் செயல்பட வேண்டிய பிரச்சனை ஆகும் என்று வலியுறுத்திய பான்- கி மூன், வளரும் நாடுகள் இதில் விட்டுக்கொடுத்துச் செயல்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
"உலகிற்கு தொழில்நுட்பங்களைப் பறிமாறுவதிலும், நிதி உதவி செய்வதிலும் தொழில்மயமான நாடுகள் முன்னிலை வகிக்கின்றன...பிரச்சனையைச் சமாளிப்பதில் எல்லா நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும், குறிப்பாக வளர்ந்த நாடுகள் நான்கும் முன்னணியில் நின்று சாதமாகச் செயல்பட வேண்டும்" என்றார் அவர்.