மும்பையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பயணித்த மீன்பிடி படகில் கிடைத்த தடயங்களில் உள்ள மரபணுவும், பிடிபட்டுள்ள ஒரே பயங்கரவாதியான அஜ்மல் கசாப்பின் மரபணுவும் ஒத்துப்போகின்றன என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
மும்பையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் அனைவரும், கராச்சியில் இருந்து வரும் வழியில் குஜராத்தைச் சேர்ந்த 'எம்.வி.குபெர்' என்ற மீன்பிடி படகை வழிமறித்து, அதன் உரிமையாளர் அஜய் சிங் சொலான்கி என்பவரைக் கொன்றுவிட்டு படகைக் கைப்பற்றி மும்பை வந்தடைந்தனர்.
அந்த மீன்பிடி படகு பின்னர் மும்பை அருகில் கைப்பற்றப்பட்டது. அதிலிருந்த லைஃப் ஜாக்கெட் உள்ளிட்ட தடயங்களைக் காவல்துறையினர் கைப்பற்றி தடய அறிவியல் ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். இந்த ஆய்வின் முடிவுகள் வழக்கு விசாரணைக்கு பெரிதும் உதவும் என்று நம்பப்படுகிறது.
இந்நிலையில், லைஃப் ஜாக்கெட்டில் இருந்த மரபணுவும் (டி.என்.ஏ.), தாக்குதலில் ஈடுபட்டபோது பிடிபட்ட ஒரே பயங்கரவாதியான அஜ்மல் கசாப்பின் மரபணுவும் ஒத்துப்போவதாக இந்தியத் தடய அறிவியல் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் என்று பி.டி.ஐ. செய்தி கூறுகிறது.
மும்பை தாக்குதலில் ஈடுபட்ட 5 பயங்கரவாதிகளின் டி.என்.ஏ.க்கள் காலினா தடய அறிவியல் சோதனைக்கூடத்தில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதில் அஜ்மல் தவிர மற்ற பயங்கரவாதிகளின் டி.என்.ஏ. பற்றிய தகவல்களும் விரைவில் வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.