மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்குத் தொடர்புள்ளது தொடர்பாக இந்தியா அளித்துள்ள ஆதாரங்களின் மீது பாகிஸ்தானிடமிருந்து இன்னும் அதிகாரப்பூர்வமான பதில் எதுவும் இல்லை என்று உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறினார்.
முன்னதாக, மும்பை பயங்கரவாதத் தாக்குதல் விசாரணை தொடர்பான தகவல்களை பாகிஸ்தான் கொடுத்துள்ளது என்று தேசப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனன் கூறியுள்ளதும், அவரது கூற்றை அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி மறுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது இரண்டாவது முறையாக எம்.கே. நாராயணனின் கூற்று அமைச்சர் சிதம்பரத்தால் மறுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தலைநகர் டெல்லியில் இன்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சிதம்பரம், "எந்தக் குழப்பமும் வேண்டாம். இந்தியா கொடுத்துள்ள ஆதாரங்களுக்கு பாகிஸ்தான் தரப்பில் இருந்த அதிகாரப்பூர்வமான பதில் எதுவும் இல்லை என்பதைத்தான் நானும் அயலுறவு அமைச்சரும் கூறுகிறோம்" என்றார்.
இந்தியாவின் ஆதாரங்கள் மீது பாகிஸ்தான் ஏராளமான கேள்விகளை எழுப்பியுள்ளது என்று தேசப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் கூறியுள்ளதையடுத்து, இந்திய அரசின் நடவடிக்கைளில் ஏதாவது குழப்பம் உள்ளதா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கே அமைச்சர் சிதம்பரம் இவ்வாறு பதிலளித்தார்.