பாபர் மசூதி இடிப்பிற்குத் தார்மீகப் பொறுப்பேற்றுத்தான் கடந்த 1992இல் உத்தரப்பிரதேச முதல்வர் பதவியில் இருந்து தான் விலகியதாகவும், பா.ஜ.க.வை அடியோடு ஒழிப்பதே தனது குறிக்கோள் என்றும் உ.பி. முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் கூறியுள்ளார்.
பா.ஜ.க.வில் இருந்து தான் விலகியதை இந்துக்கள் மட்டுமல்லாது முஸ்லிம் மக்களும் வரவேற்றுள்ளதாகவும், இரண்டு தரப்பினரும் தனக்குக் கடிதங்கள் மூலமாகவும் தொலைபேசி அழைப்புக்கள் மூலமாகவும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருவதாகவும் கல்யாண்சிங் கூறினார்.
எல்லாத் தரப்பு மக்களின் நலன்களுக்காகவும்தான் தான் பணியாற்றி வருவதாகவும், முஸ்லிம்களைத் தான் ஒருபோதும் ஒதுக்கவில்லை என்றும் தெரிவித்த கல்யாண்சிங், தான் மதசார்பற்றவன் என்பதற்கு யாருடைய சான்றிதழும் தேவையில்லை என்றார். மேலும், தான் பதவி விலகியதை அடுத்து பா.ஜ.க. பலவீனமாகி விட்டதாகவும் அவர் கூறினார்.
முஸ்லிம்கள் பா.ஜ.க.விற்கு எதிரானவர்களே தவிர எனக்கு எதிரானவர்கள் அல்ல. இப்போது எனது நோக்கமும் பா.ஜ.க.வை ஒழிப்பது என்பதால், அக்கட்சியில் இருந்து நான் விலகியதை முஸ்லிம்கள் இரு கரம் நீட்டி வரவேற்கிறார்கள் என்றார் அவர்.