சர்வதேசப் பயங்கரவாத இயக்கமான அல்- காய்டாவுடன் தொடர்புடையதாக ஒரு இந்தியர்தான் ஸ்பெய்னில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக 4 இந்தியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
கைதாகியுள்ள இந்தியரின் பெயர் விவரம் ஜகன்ஜீத் சிங் என்று மத்திய அயலுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
அல்- காய்டாவுடன் தொடர்புடையதாக ஸ்பெய்னில் கைது செய்யப்பட்டுள்ள அயல்நாட்டவர்கள் 14 பேரில் ஒருவர்தான் இந்தியர் என்றும், அனைவரும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட பிறகு ஸ்பெய்ன் அதிகாரிகள் மேல் விவரங்களை தருவார்கள் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அல்- காய்டா இயக்கத்துடன் தொடர்புடைய ஆவணங்களுடன் ஸ்பெய்னின் கிழக்கத்திய நகரமான மிஸ்லாட்டாவில் வீடு ஒன்றில் பதுங்கி இருந்த 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 4 இந்தியர்களும், ஒரு பாகிஸ்தானியரும் அடக்கம் என்றும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார் என்று ஊடகங்கள் தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.