பொருளாதாரப் பின்னடைவின் காரணமாக இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்று மாதங்களில் மட்டும் 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக மத்திய அரசு அண்மையில் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
இந்தியாவின் வேலைவாய்ப்பில் பொருளாதாரப் பின்னடைவு ஏற்படுத்தியுள்ள பாதிப்பு குறித்து தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் தொழிலாளர் துறை நடத்தி வரும் ஆய்வின் முதல் பகுதியில் கண்டறியப்பட்டு உள்ள தகவல்தான் இது.
நமது நாடு முழுவதும் 11 மாநிலங்களில் 20 மையங்களில் உள்ள 2,581 அலகுகள் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. டெக்ஸ்டைல்ஸ் மற்றும் கார்மெண்ட்ஸ், மெட்டல் மற்றும் மெட்டல் புராடக்ட்ஸ், தகவல் தொழில்நுட்பம், பி.பி.ஓ., ஆட்டோ மொபைல், ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், போக்குவரத்து, கட்டுமானம் மற்றும் சுரங்கம் ஆகியவை உள்ளிட்ட 8 முக்கியத் துறைகளில் ஆய்வு நடத்தப்பட்டது.
இந்தத் துறைகளில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1 கோடியே 62 லட்சம் பேர் பணியாற்றி வந்தனர். இது டிசம்பர் மாதம் 1 கோடியே 57 லட்சமாகக் குறைந்துள்ளது. இதற்குப் பொருளாதாரப் பின்னடைவுதான் காரணமாகும்.
ஏற்றுமதித் துறைகளில் ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறைதான் 8.43 விழுக்காடு பணியாட்களை வெளியேற்றியதன் மூலம் முதலிடத்தில் உள்ளது. அடுத்த படியாக மெட்டல் துறை 2.6 விழுக்காடும், ஆபரணங்கள் துறை 1.29 விழுக்காடும் பணியாட்களை வெளியேற்றியுள்ளன.