இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்து அப்பாவித் தமிழ் மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள பொது வேலை நிறுத்தத்திற்கு புதுவையில் முழு ஆதரவு கிடைத்துள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் எல்லா வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன. பேருந்துகள், சரக்கு வாகனங்கள், ஆட்டோக்கள் என எந்த வாகனங்களும் ஓடவில்லை. சாலைகள் போக்குவரத்தின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.
தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் இன்று இரண்டு காட்சிகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
மத்திய மாநில அரசு அலுவலகங்கள் வழக்கம்போல இயங்கினாலும், ஊழியர் வருகை மிகக் குறைவாகவே இருந்தது. அரசுப் பள்ளிகள் வழக்கம்போல இயங்கினாலும், போக்குவரத்துச் சிக்கல் காரணமாக மாணவர் வருகை மிகவும் குறைவாகவே இருந்தது. மிகப்பெரிய டெக்ஸ்டைல் மில்களும் குறைவான ஊழியர்களைக் கொண்டு வழக்கம்போல இயங்கின.
புதுவை வழியாகச் செல்லும் தமிழக அரசுப் பேருந்துகளும், புதுவை சாலைப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளும் காவல்துறையினரின் பாதுகாப்போடு இயங்கின. ஆங்காங்கே சில பேருந்துகள் மர்மக் கும்பல்களால் தாக்கப்பட்ட தகவல்களும் வந்துள்ளன. அரியான்குப்பம் அருகில் புதுச்சேரி- கடலூர் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது.