அணு மின் உலைகளை அமைப்பதற்கான வர்த்தக ஒப்பந்தத்தில் ஃபிரான்ஸ் நிறுவனமான அரேவா-வுடன் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. அணு சக்தித் துறையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இந்தியா 34 ஆண்டுகளுக்குப் பிறகு அதிலிருந்து விடுபட்டுக் கையெழுத்திட்டுள்ள முதலாவது ஒப்பந்தம் இது.
இந்த ஒப்பந்தத்தின்படி மராட்டிய மாநிலம் ஜெட்டாபூர் அணு மின் நிலையத்தில் நிறுவுவதற்காக 1650 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு ஐரோப்பிய அழுத்த அணு உலைகளை முதற்கட்டமாக அரேவா இந்தியாவிற்கு வழங்கும் என்று கருதப்படுகிறது.
இந்தியாவிற்கு வருகை தந்துள்ள ஃபிரான்ஸ் அயலுறவு வர்த்தகத்துறை இணை அமைச்சர் அன்னே மேரி இட்ராக், இந்திய பிரதமர் அலுவலக விவகாரத்துறை இணை அமைச்சர் பிரித்விராஜ் சவான் ஆகியோர் முன்னிலையில், அரேவா மற்றும் இந்திய அணு மின் கழகம் ஆகிய நிறுவனங்களின் அதிகாரிகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரித்விராஜ் சவான், அரேவா நிறுவனம் ஜெட்டாபூரில் அணு பூங்கா ஒன்றை அமைக்கவுள்ளதாக அறிவித்தார்.