முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலையில் முன்னேற்றம்
Publish Date: Wed, 04 Feb 2009 (10:06 IST)
Updated Date: Wed, 04 Feb 2009 (10:06 IST)
சுவாசக் கோளாறு மற்றும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக எய்ம்ஸ் மருத்துவர்கள் இன்று தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தின் மேற்பார்வையாளர் மருத்துவர் டி.கே.ஷர்மா, சுவாசப் பாதையில் தொற்று, காய்ச்சல் காரணமாக அவதிப்பட்ட வாஜ்பாய்க்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதாகக் கூறினார். இதன் காரணமாக அவரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும், அவர் சுயநினைவுடன் இருப்பதாகவும் தெரிவித்த ஷர்மா, எனினும் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் உள்ளதால் அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார் என்றார். உடல்நலக்குறைவால் புதுடெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அடல் பிஹாரி வாஜ்பாய் நேற்றிரவு அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.