இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் நாளை அறிவித்துள்ள பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரும் வழக்கை உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்து அப்பாவித் தமிழர்களைப் பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பா.ம.க., ம.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் அடங்கிய இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தமிழகத்தில் நாளை பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை எதிர்த்து, அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இன்று அந்தக் கோரிக்கையைப் பரிசீலித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதிகள் பி.சதாசிவம், ஜெ.எம். பன்சால் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு, வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மறுப்புத் தெரிவித்தது, கோரிக்கையை நிராகரித்தனர்.
முன்னதாக ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், பொது வேலை நிறுத்தத்தை அனுமதித்தால் அது வன்முறைக்கு வழி வகுப்பதோடு பொது மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே தனது வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொண்டு பொது வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.