இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்புக் குழு நாளை அறிவித்துள்ள பொது வேலை நிறுத்தத்தின்போது வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் வி.வைத்தியலிங்கம் எச்சரித்தார்.
இதுகுறித்துப் புதுவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அரசு அலுவலகங்களும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் நாளை வழக்கம்போல இயங்கும் என்றும், போக்குவரத்து வழக்கம்போல இயங்கும் என்றும், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்குப் போதிய பாதுகாப்பு தரப்படும் என்றும் தெரிவித்தார்.
மக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும் என்று கூறிய அவர், இடையூறு செய்து வன்முறையில் ஈடுபடுபவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.
இதற்கிடையில, பொது வேலை நிறுத்தத்தை முன்னிட்டுச் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிப்பதற்காக உள்துறை அமைச்சர் வல்சராஜ் தலைமையில் காவல்துறை உயர் அதிகாரிகள் கூட்டம் கூட்டப்பட்டு உள்ளது.
மேலும், இன்று மாலை நடக்கவுள்ள அமைச்சரவைக் கூட்டத்திலும் பொது வேலை நிறுத்தம் குறித்து விவாதிக்கப்படுகிறது.