Publish Date: Tue, 03 Feb 2009 (15:43 IST)
Updated Date: Tue, 03 Feb 2009 (15:42 IST)
இலங்கையில் போர் நிறுத்தம் செய்து அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி புதுச்சேரியில் பல்வேறு தரப்பினரும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து புதுவை மத்தியச் சிறைச்சாலையில் கைதிகள் அனைவரும் இன்று உண்ணாவிரதம் இருந்தனர். இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதேவேளையில், இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி இரயில் மறியல் போராட்டம் நடத்த முயன்ற மீனவ விடுதலை வேங்கைகள் இயக்கத்தைச் சேர்ந்த 102 பேர் கைது செய்யப்பட்டனர்.
வெங்கடசுப்பு ரெட்டியார் சிலையில் இருந்து ஊர்வலமாகச் சென்று அருகில் உள்ள இரயில்வே கேட்டை அடைந்தபோது, அனைவரையும் காவலர்கள் தடுத்துக் கைது செய்தனர்.
இதற்கிடையில், திருவள்ளுவர் நகர் கிராம மக்கள் அனைவரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக் கவுன்சிலர் ராஜலட்சுமி தலைமையில் இன்று காலை முதல் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கவுன்சில் உறுப்பினரும், சட்டமன்ற உறுப்பினருமான ஆர். விஸ்வநாதன் உண்ணாவிரதத்தைத் துவக்கி வைத்தார்.