மக்களவைத் தேர்தல் நடத்துவது தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் இன்று முறைப்படி பேச்சுவார்த்தையைத் துவக்கியுள்ளது. ஏப்ரல்- மே மாதத்தில் தேர்தல் நடத்தப்படும் எனத் தெரிகிறது.
தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசுவாமி, தேர்தல் ஆணையர்கள் நவீன் சாவ்லா, எஸ்.ஒய்.குரைஷி ஆகியோர் தலைமையில் நடக்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட 47 தேசிய, மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
பாரபட்சமான முறையில் நடந்து கொண்டதற்காக தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவை பதவி நீக்க வேண்டும் என தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசுவாமி குடியரசுக்கு தலைவருக்கு பரிந்துரை செய்த விவகாரம் புயலைக் கிளப்பியது.
அச்சம்பவத்திற்குப் பின்னர் தேர்தல் ஆணையர்கள் மூவரும் இன்று ஒன்றாகக் கூடி விவாதம் நடத்தி வருகின்றனர்.
ஏப்ரல் 8 ஆம் தேதியில் இருந்து மே 15ஆம் தேதிக்குள் மக்களவைத் தேர்தல் நடத்தப்படும் என கடந்த சில தினங்களுக்கு முன் தேர்தல் ஆணையர் குரைஷி கூறியிருந்த நிலையில், அரசியல் கட்சிகளுடனான விவாதத்தை தேர்தல் ஆணையம் இன்று கூட்டியுள்ளது. எனினும், தேர்தல் தேதிகள் குறித்து இன்னும் தேர்தல் ஆணையம் முடிவு செய்யவில்லை.
இந்தத் தேர்தலில் 67.1 கோடி வேட்பாளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்வார்கள் என்பதால் அதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிடும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட ஆயத்தமாகி வருகிறது. அதற்கு ஊக்கமளிக்கும் வகையில் இன்று அரசியல் கட்சிகளுடனான விவாதத்தை தேர்தல் ஆணையம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.