இந்தியாவும் ஐ.நா.வும் உடனடியாகத் தலையிட்டு இலங்கையில் நடந்து வரும் போரை முடிவிற்குக் கொண்டுவர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் வலியுறுத்தினார்.
இதுகுறித்து, மதுரையில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சிறிலங்கா அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் ஒரு புரிதலுக்கு வந்து போரை நிறுத்தவும், அவர்களின் பணையக் கைதிகளாக அப்பாவி மக்கள் மாற்றப்படாமல் தடுக்கவும் இந்திய அரசும், ஐக்கிய நாடுகளும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்" என்றார்.
"தமிழ் மக்களின் பாதுகாப்புதான் இந்தியர் அனைவரின் முக்கியக் கவலை ஆகும். போர் நடக்கும் பகுதிகளில் சிக்கியுள்ள தமிழ் மக்களின் பாதுகாப்பு உடனடியாக உறுதிப்படுத்தப்பட வேண்டும். போர் முனையில் இரண்டு லட்சம் மக்கள் சிக்கியுள்ளதாக சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம்கூடக் கூறியுள்ளது. அப்பாவி மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதை சிறிலங்க இராணுவம் அல்லது தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகிய யார் தடுத்தாலும், அது மனிதப் பேரழிவை ஏற்படுத்திவிடும்" என்றார் அவர்.
இலங்கைப் பிரச்சனையில், சில அரசியல் கட்சிகளும் அடங்கிய இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் தமிழகத்தில் நாளை மறுநாள் அறிவித்துள்ள பொது வேலை நிறுத்தம் நிலைமையை மேலும் மோசமாக்குமே தவிர எந்தப் பலனையும் தராது என்றும் காரத் கூறினார்.
மேலும், தமிழர்கள் அதிகமாக வசிக்கும் கிழக்கு, வடக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வையும் சம நீதியையும் வழங்கும் 13ஆவது அரசமைப்புச் சட்டத்திருத்தத்தை சிறிலங்க அரசு கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என்ற காரத், தமிழர்களுக்கு தன்னாட்சி தருவது தொடர்பில் சிறிலங்க அதிபர் ராஜபக்ச அளித்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை என்று குற்றம்சாற்றினார்.
13ஆவது அரசமைப்புச் சட்டத்திருத்தத்தை அமல்படுத்துவதன் மூலம் அதிகாரப்பகிர்வு மேற்கொள்ளப்படும் என்று இந்திய அயலுறவு அமைச்சரிடம்கூட சிறிலங்க அரசு உறுதியளித்துள்ளது. ஆனால், இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண்பதைவிட இராணுவத் தீர்வு காண முடியும் என்பதில்தான் சிறிலங்க அரசு கவனமாக உள்ளது. எனவே சட்டத்திருத்தத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று சிறிலங்காவை இந்தியா வலியுறுத்த வேண்டும் என்றார் காரத்.