Publish Date: Mon, 02 Feb 2009 (15:28 IST)
Updated Date: Mon, 02 Feb 2009 (15:27 IST)
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், தமிழகத்தைப் போலவே புதுவையிலும் கல்லூரிகளைக் காலவரையன்றி மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அங்கு போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி புதுச்சேரி முழுவதும் அரசு, தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மாணவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால், அனைத்துக் கல்லூரிகளையும் அதனோடு இணைந்த விடுதிகளையும் உடனடியாக மூடும்படி புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்துப் புதுவை அரசின் கல்லூரிக் கல்வி இயக்குநர் ஜெயந்த குமார் ரே விடுத்துள்ள செய்திக் குறிப்பில், "மாணவர்களிடையே பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், மாநிலத்தில் தனியார் மற்றும் அரசு கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளும், மாணவர் விடுதிகளும் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டு இருக்கும்'' என்று கூறப்பட்டுள்ளது.
கல்லூரி விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் அனைவரும் உடனடியாக விடுதிகளைக் காலி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
முன்னதாக, நேற்று தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளையும் அதனுடன் இணைந்த விடுதிகளையும் மூடுமாறு தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.